தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தலா? அமைச்சர் மறுப்பு
தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன். (கோப்பு படம்).
திருப்பூரில் பனியன் தொழிலாளியாக பணியாற்றி வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த சஞ்சீவ் குமார் என்பவர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் சஞ்சீவ் குமாரின் செல்போன் உள்ளிட்டவை காணவில்லை என்பதால் அவர் அடித்து கொலை செய்யப்பட்டதாக தகவல் பரவியது. இதனால், ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் ரயில்வே இருப்புபாதை காவல் நிலையம் முன்பு குவிந்தனர்.
மேலும், தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக தகவல் பரவியதால் ஏராளமானோர் ரயில் நிலையங்களில் குவியத் தொடங்கினர். இதற்கிடையே, தமிழகத்தில் உள்ள வடமாநிலத் தொழிலாளர்கள் மார்ச் 20 ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் வதந்தி பரவியது.
இதுதொடர்பாக, கோவையில் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத் தலைவர் ராஜ்குமார் கூறும்போது, இது போன்ற வதந்திகள் தமிழகத்திற்கு மிகப்பெரிய பின்னடைவை உருவாக்கும். தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் பத்து லட்சம் பேர் உள்ளனர் என்றார்.
அமைச்சர் கணேசன் மறுப்பு:
இந்த விவகாரம் தொடர்பாக, தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன் வெளியிட்ட அறிக்கை விவரம் வருமாறு:
பெருந்தொழில் மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் பல ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் பெருமளவில் முதலீடு செய்து வந்து அதில் பல மாநிலங்களில் இருந்தும் தொழிலாளர்கள் வந்து அமைதியான சூழ்நிலையில் பணியாற்றி மாநிலத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகின்றார்கள்.
அதேபோல், மேம்பாலக் கட்டுமானம், மெட்ரோ ரயில் உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளிலும் வட மாநில தொழிலாளர்கள் பெருமளவில் ஈடுபட்டு அந்தத் துறைகளின் வளர்ச்சிக்கு தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றார்கள்.
அந்தத் தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அந்தந்த நிறுவனங்கள் வழங்கி கவருகின்றன. நிறுவனங்களிலும் தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலச் சட்டங்கள் கடைபிடிக்கப்படுவதை துறை மூலமாக உறுதி செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டிற்கு வருபவர்களை நேசக் கரம் கொண்டு வரவேற்பதுதான் தமிழ் மக்களின் பண்பாடு மற்றும் நடைமுறை. விருந்தோம்பலுக்குப் பெயர்பெற்ற தமிழ்நாட்டு மக்களும், தொழிலாளர் நலன் காக்கும் தமிழ்நாடு அரசும் இந்த உடலுழைப்புத் தொழிலாளர்களின் பங்களிப்பை நன்கு உணர்ந்து இருப்பதால், இணக்கமான, அமைதியான சூழ்நிலையில் இங்கு அனைவரும் வாழ்ந்து வருகிறார்கள்.
இந்தச் சூழ்நிலையில் சில சமூக வலைதளங்களில் உண்மைக்கு மிகவும் மாறான, தவறான உள்நோக்கத்தோடு, வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் சில இடங்களில் தாக்கப்படுவதாக விஷமத்தனமான செய்தி சிலரால் பரப்பப்பட்டு வருகிறது.
அதில் எந்தவிதமான உண்மையும் இல்லை என்பதை தமிழ்நாட்டில் இருக்கும் வடமாநிலத்தவர் உள்ளிட்ட அனைவரும் அறிவார்கள். தொழில் அமைதிக்கும், சமூக அமைதிக்கும் எப்போதும் பெயர் பெற்று விளங்கும் தமிழ்நாட்டில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற்றதாக செய்தி பரப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் மட்டுமல்ல எல்லா மாநில தொழிலாளர்களும் எந்தவித அச்சமுமின்றி அமைதியாக, சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என அமைச்சர் கணேசன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu