இரண்டு முக்கிய மேம்பாலத்திற்கு அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டினார்
கூடுவாஞ்சேரி - சிங்கப்பெருமாள் இரயில் நிலையங்களுக்கு இடையே மேம்பாலம், வண்டலூர் - வாலாஜாபாத் சாலையில் பல்லடுக்கு மேம்பாலம் – ஆகியவற்றை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார்.
இன்று (15.12.2021) காலை 8.30 மணியளவில் சிங்கப்பெருமாள் கோயில் ரயில் நிலையம் அருகில் நடைபெற்ற விழாவில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்கள், கூடுவாஞ்சேரி- சிங்கப்பெருமாள் கோவில் இரயில் நிலையங்களுக்கு இடையே இரயில்வே மேம்பாலம் வண்டலூர் - வாலாஜாபாத் சாலையில் பல்லடுக்கு மேம்பாலப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பால பணிகளை துவக்கி வைத்தார்.
அமைச்சர் பாலப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி உரையாற்றுகையில், கூடுவாஞ்சேரி- சிங்கப்பெருமாள் கோயில் இரயில் நிலையங்களுக்கு இடையே இரயில்வே இருப்புப் பாதை கடவு எண்.47க்கு பதிலாக ரூ.90.74 கோடியில் சாலை மேம்பாலம் அமைக்கும் பணி 30-மாதக் காலத்திற்குள் நிறைவடையும். இந்த இரயில்வே மேம்பாலப்பணி நிறைவுற்றவுடன், ஓரகடம் தொழிற்பேட்டை ஸ்ரீபெரும்புதூர் மற்றும் காஞ்சிபுரம் செல்லும் வாகனங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்தார்.
வண்டலூர்- வாலாஜாபாத் சாலையில் பல்லடுக்கு மேம்பாலப் பணி ரூ.26.64 கோடி மதிப்பீட்டில் 18- மாதக் காலத்திற்குள் நிறைவடையும். இந்த பல்லடுக்கு மேம்பாலப்பணி நிறைவுற்றவுடன், படப்பை, ஓரகடம் செல்லும் வாகனங்களுக்கு பேருதவியாக இருக்கும். ஓரகடம் தொழிற்பேட்டைக்கு, தென் தமிழ்நாட்டிலிருந்து மூலம் பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களுக்கு இந்த இரண்டு பாலங்களால் காலதாமதமின்றி விரைவில் சென்றடைய பேருதவியாக இருக்கும் என்று தெரிவித்தார்.
இந்த துவக்க விழாவில் ஊரகத் தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள், காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் ஸ்ரீகணேசன் மற்றும் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் ம.வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் பங்கேற்றனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu