மேகதாது அணை விவகாரம்: அமைச்சர் துரைமுருகன் டெல்லி பயணம்
அமைச்சர் துரைமுருகன்.
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்துக்கு, விரைவாக ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி, கர்நாடக துணை முதல்வர் சிவகுமார், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு, கடந்த மாதம் 20ம் தேதி கடிதம் எழுதி உள்ளார்.
மேலும், தமிழகத்தில் இரண்டாம் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் உட்பட, பல்வேறு குடிநீர் திட்டங்கள் சட்ட விரோதமாக செயல்படுத்தப்படுகிறது எனவும் குற்றம் சாட்டி உள்ளார்.
இது, தமிழக மக்கள் மற்றும் விவசாயிகளிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பதில், தமிழக அரசு உறுதியாக இருப்பதாக, நேற்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், காவிரி நீர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் ஆகியோரை சந்தித்து, 'கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட அனுமதி அளிக்கக் கூடாது' என வலியுறுத்துவதற்காக, அமைச்சர் துரைமுருகன் இன்று டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த விவகாரம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், காவிரி நிர்வாகத்தை காவிரி மேலாண்மை வாரியம் என்ற அமைப்பிடம் உச்ச நீதிமன்றம் ஒப்படைத்து உள்ளது. வழக்கு தீர்ந்து இதுதான் முடிவு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருக்கக்கூடிய நீர்நிலைமை என்ன என்று தெரியாது. இருந்தாலும் தமிழக அரசு கர்நாடக அரசிடம் பேச முடியாது, பேசினாலும் அது சட்டப்படி தவறு.. அது முடிந்து போன விவகாரம்.
நானே டெல்லி சென்று காவிரி மேலாண்மை வாரிய அதிகாரிகளை சந்திக்க உள்ளேன். எந்த காரணத்தைக் கொண்டும் மேகதாதுவில் அணை கட்ட தமிழ்நாடு அரசு அனுமதிக்காது. சட்டப்படியும் அது முடியாது, வேண்டுமென்றால் அவர்கள் அணைகட்டி விடுவோம் என்று பேசிக்கொண்டு இருக்கலாம். என்னைப் பொறுத்தவரையில் கர்நாடகாவின் அரசியல் ஸ்டண்ட் அவர்களால் ஒன்றும் மேகதாதுவில் அணை கட்ட முடியாது.
கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு இரண்டுமே அண்டை மாநிலங்கள். ஏராளமான தமிழர்கள் கர்நாடகாவில் வசிக்கின்றனர். ஏராளமான கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் நல்ல நிலைமையில் உள்ளனர். ஆகவே இவை எல்லாம் பாதகம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது தான் இரண்டு அரசுகளின் பொறுப்பு. தமிழ்நாடு அரசு உணர்ந்துள்ளது. உள்ளபடியே அவர்களும் உணர்வார்கள் என்று கருதுகிறேன் என்று கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu