அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு: நீதிபதி திடீர் விலகல்

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு: நீதிபதி திடீர் விலகல்
X

சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).

அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுந்தர் அறிவித்துள்ளார்.

தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராக இருப்பவர் அனிதா ராதாகிருஷ்ணன். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், இவர், கடந்த 2001-2006 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்தார்.

அந்த காலக்கட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக 2 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை கடந்த 2006 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகள் குறித்தும் விசாரிக்க அதிகாரம் வழங்கி, சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தில் 2009 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திருத்தத்தின் அடிப்படையில், அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அமலாக்கப் பிரிவுக்கு வழக்குப்பதிவு செய்து விசாரித்தது.

இதன் தொடர்ச்சியாக, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துகளை 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமலாக்கத்துறை முடக்கியது. சொத்துகளை முடக்கியதற்கு எதிராகவும், அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரியும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கில் அமலாக்கத் துறை விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து கடந்த டிசம்பர் மாதம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி சுந்தர் அறிவித்து, வழக்கை தலைமை நீதிபதி ஒப்புதலை பெற்று, வேறு நீதிபதிகள் அமர்வில் பட்டியலிடும்படி பதிவுத்துறைக்கு அறிவுறுத்தி உள்ளார். அமைச்சர் வழக்கின் விசாரணையில் இருந்து நீதிபதி திடீரென விலகி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!