வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் காலமானார்: கவலையில் வியாபாரிகள்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் காலமானார். இதனால் வியாபாரிகள் கவலையில் உள்ளனர்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை என்ற பெயரில் வியாபாரிகளின் நலனிற்காக ஒரு அமைப்பை தொடங்கியவர் வெள்ளையன். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள பிச்சிவிளை என்ற கிராமத்தை சேர்ந்த இவர் பல ஆண்டுகளுக்கு முன் வியாபார நோக்கத்தில் சென்னை சென்றார். பெரம்பூர் பகுதியில் கடைகள் அமைத்து வியாபாரம் செய்தார். முதலில் பெரம்பூர் பகுதியில் வணிகர் சங்கத்தை தொடங்கினார். அதன் பின்னர் அந்த சங்கம் வணிகர் சங்கங்களின் பேரவை என்ற பெயரில் சென்னை புறநகர் பகுதிக்கும், அதன் பின்னர் பெருநகர சென்னை பகுதிக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரவை என்ற அமைப்பு உருவானது. இதன் மாநில தலைவராக வெள்ளையன் செயல்பட்டு வந்தார். வெள்ளையன் இந்த சங்கத்தை தொடங்குவதற்கு முன்பாக அந்தந்த ஊர்களில் வியாபார சங்கம் ,வணிகர் சங்கம் என பல இருந்தன. ஆனால் மாநில அளவில் ஒருங்கிணைந்த வலுவான சங்கம் இல்லை.
இந்த நிலையில் தான் ஒன்றிய அளவில், தாலுகா அளவில், மாவட்ட அளவில் என இருந்த சங்கங்களை ஒருங்கிணைத்து மாநில அளவில் ஒரு சங்கத்தை உருவாக்கிய பெருமை வெள்ளையனையே சேரும்.வெள்ளையன் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை என்ற சங்கத்தை தொடங்கிய பின்னர் வியாபாரிகள் புத்துயிர் பெற்றனர். குக்கிராமம் முதல் சென்னை பட்டணம் வரை வியாபாரிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளை வெள்ளையன் தீர்த்து வைத்தார். வியாபாரிகளின் கோரிக்கைகளுக்காக பல போராட்டங்களை நடத்தினார். சென்னையில் ரவுடிகளின் கொட்டத்தை அடக்கி வியாபாரிகள் சுதந்திரமாக பயமின்றி வியாபாரம் செய்ய பாடுபட்டார்.
ஆன்லைன் வர்த்தகத்தை தடுப்பது, அந்நிய பொருட்களின் இறக்குமதிக்கு எதிர்ப்பு, மொத்த வியாபாரம் என்ற பெயரில் பன்னாட்டு கம்பெனிகளின் வரவிற்கு தடை விதிப்பது போன்ற போராட்டங்களை தொடர்ந்து நடத்தி சில்லறை வியாபாரிகளின் வாழ்வாதாரத்திற்காக பாடுபட்டார். கொக்கோ கோலா குளிர்பானத்திற்கு எதிராக அவர் நடத்திய போராட்டம் அரசியல் கட்சிகளையே திரும்பிப் பார்க்க வைத்தது.
இதன் காரணமாக அவருக்கு அரசியல் ஆசையும் ஏற்பட்டது. ஒரு சட்டமன்றத் தேர்தலில் வணிகர் சங்கங்களின் பேரவை தேர்தல் களத்திலும் குறித்தது. ஆனால் அதில் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. ஆனாலும் வெள்ளையன் ஒரு அரசியல் கட்சி தலைவர் போல் மாநாடு நடத்துவது, சங்க நிர்வாகிகளின் இல்ல விழாக்களுக்கு செல்வது என சுறு சுறுப்பாக இயங்கி வந்தார். ஆண்டுக்கு ஒரு முறை மே 5ஆம் தேதி வணிகர் சங்கங்களின் மாநாட்டை நடத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அந்த வகையில் 42 மாநாடுகளை அவர் நடத்தி உள்ளார்.
இந்த மாநாட்டை ஒரே இடத்தில் நடத்தாமல் சென்னை ,திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி என பல நகரங்களில் நடத்தி சாதனை புரிந்துள்ளார். வெள்ளையன் சங்கத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதிலிருந்து பின்னர் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு என்ற புதிய சங்கம் உருவானது. அதனை தற்போது விக்கிரமராஜா நடத்தி வருகிறார்.
நுரையீரல் தொற்று காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வெள்ளையன் இன்று மதியம் 2.30 மணி அளவில் இயற்கை எய்தினார்.அவருக்கு வயது 76. இவருக்கு மனைவியும் மூன்று மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர். வெள்ளையன் உடல்நல குறைவு காரணமாக பல இடங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதும் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளராக அவரது மகன் டைமன் ராஜா செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வணிகர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து அரசியல் கட்சிக்கு இணையாக இயக்கத்தை நடத்தி வந்த வெள்ளையனை இழந்து இருப்பதால் தமிழக முழுவதும் வியாபாரிகள் கவலையில் உள்ளனர். வியாபாரிகளின் நலன் மற்றும் உரிமைகளுக்காக போராடிய வணிகர்களின் போர்வாள் உடைந்து விட்டதாக கருதுகிறார்கள். வெள்ளையன் உடல் அஞ்சலிக்காக சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது .அவரது உடல் நாளை சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வியாபாரியாக இருந்தாலும் அந்நிய பொருட்களுக்கு எதிர்ப்பு, ஆன்லைன் வர்த்தகத்திற்கு நிரந்தர எதிர்ப்பு என்ற கொள்கையில் இறுதி வரை இருந்த வெள்ளையன் அடர்ந்த வெள்ளை நிற தலைமுடி, முறுக்கிய வெள்ளை மீசை, நெற்றியில் திருநீறு, வெள்ளை நிற கதர் ஆடையில் தனித்துவ அடையாளத்துடன் காணப்பட்டார். வியாபாரிகளின் இந்த அடையாளம் மறைந்து விட்டதாகவே வியாபாரிகள் கருதுகிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu