நடுக்கடலில் விபத்து: மீனவர்கள் 3 பேர் பலி, 9 பேரை காணவில்லை

நடுக்கடலில் விபத்து: மீனவர்கள் 3 பேர் பலி, 9 பேரை காணவில்லை
X
நடுக்கடலில் கப்பல் மோதி விசைப்படகு உடைந்து விபத்து - காணாமல் போன 9 மீனவர்களை தேடும் பணி தீவிரம்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் வட்டார பகுதியை சேர்ந்த அலெக்ஸ்சாண்டர், தாசன் மேற்கு வங்கத்தை சேர்ந்த மாணிக்தாஸ், சுனில்தாஸ் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வேல்முருகன், மாணிக்கவேலு, பாலமுருகன், பழனி தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த டென்சன் உட்பட 14 மீனவர்கள் கடந்த 11 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே பேப்பூர் பகுதியிலிருந்து அதே பகுதியைச் சேர்ந்த ஜாபர் என்பவருக்கு சொந்தமான ஐ.எப்.பி ரப்பா என்ற பெயர் கொண்ட விசைப்படகில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

பத்து நாட்கள் ஆழ்கடலில் தங்கியிருந்து மீன்பிடிக்க திட்டமிட்டு சென்ற நிலையில் கடந்த 13 ஆம் தேதி செவ்வாய் கிழமை கர்நாடக கேரள கடல் எல்லையான மங்களூரில் இருந்து 55 கடல்மைல் தூரத்தில் விசைப்படகில் அதிகாலையில் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த கொரியாவைச் சேர்ந்த ஏ.பி.எல் ஹாவ்ரே என்ற பெயர் கொண்ட கப்பல் விசைப்படகு மீது மோதியுள்ளது. இதில் விசை படகு கவிழ்ந்து படகில் இருந்த மீனவர்கள் கடலுக்குள் விழுந்தனர்.

இந்த விபத்தில் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்த அலெக்ஸ்சாண்டர், தாசன், மேற்கு வங்கத்தை சேர்ந்த மாணிக்தாஸ் ஆகிய 3 மீனவர்கள் உயிரிழந்தனர், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வேல்முருகன், மேற்கு வங்கத்தை சேர்ந்த சுனில்தாஸ் ஆகிய 2 மீனவர்கள் கவிழ்ந்த படகின் மீது ஏறி நின்று உயிர் தப்பினர்.

தூத்துக்குடியை சேர்ந்த டென்சன், ராமநாதபுரத்தை சேர்ந்த மாணிக்கவேலு, பாலமுருகன், பழனி மேற்கு வங்கத்தை சேர்ந்த 5-பேர் உட்பட 9 மீனவர்கள் மாயமாயினர். விபத்து குறித்து தகவல் கிடைத்து சம்பவ இடம் விரைந்த கடலோர காவல் படையினர் உயிரிழந்த 3 பேரின் உடலை மீட்டதோடு உயிருடன் இருந்த வேல்முருகன், சுனில்தாஸ் ஆகியோரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும் காணாமல் போன மீனவர்களை மீட்கும் பணியில் கடலோர காவல் படையினர், கப்பல் படையினர் ஈடுபட்டு உள்ளனர், மீட்பு பணியில் கடலோர காவல் குழுமத்தின் ராஜ்தூத் என்ற விசைப்படகு உட்பட மூன்று விசைப்படகுகள் மற்றும் இரண்டு ஹெலிகாப்டர்களில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

விபத்தில் உயிரிழந்த குளச்சல் பகுதியைச் சேர்ந்த மீனவர் அலெக்சாண்டர், மற்றும் தாசன் ஆகியோர் உடல்கள் நேற்று மாலை பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நல்லடக்கம் செய்யப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!