மருத்துவம் என்பது வேலை அல்ல அது ஒரு சேவை: மருத்துவப் பல்கலை பட்டமளிப்பு விழாவில் முதல்வர்

மருத்துவம் என்பது வேலை அல்ல அது ஒரு சேவை: மருத்துவப் பல்கலை பட்டமளிப்பு விழாவில் முதல்வர்
X

சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உரையாற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் 34-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.

சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் 34-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

உடன் தமிழ்நாடு ஆளுநரும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என். ரவி, உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தருமான மா. சுப்பிரமணியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் மருத்துவர் ஜெ. ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணை வேந்தர் மருத்துவர் சுதா சேஷய்யன், பதிவாளர் அஸ்வத் நாராயணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் இருந்தனர்.


இந்த விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது உரையில் பேசியதாவது :

இன்று தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 34-ஆவது பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தந்திருக்கக்கூடிய ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களே, தமிழ்நாட்டு மக்களின் சார்பில் வருக வருக என்று நானும் முதலமைச்சர் என்கிற முறையில் வரவேற்கிறேன்.

தமிழ்நாட்டின் ஆளுநராகவும் பல்கலைக்கழக வேந்தருமாகச் செயல்பட்டு வரும் மேதகு ஆர்.என்.ரவி அவர்களுக்கு முதற்கண் எனது வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்!

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் நான் கலந்துகொள்வது என்பதை ஒரு நிகழ்ச்சியாக மட்டும் நான் கருதவில்லை. எங்களையெல்லாம் ஆளாக்கிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மருத்துவக் கல்லூரிக் கனவின் அடையாளம்தான் இந்தப் பல்கலைக்கழகம்.

1987- ஆம் ஆண்டின் தமிழ்நாடு மருத்துவப் பல்கலைக்கழக (சென்னை ) சட்டத்தின்படி இப்பல்கலைக்கழகம் நிறுவப்பட்டிருந்தாலும், இதற்கு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் என்ற பெயரைச் சூட்டியவர் அன்றைக்கு முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள் என்பதை நான் நினைவூட்ட விரும்புகிறேன்.

இப்பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற 643 கல்வி நிறுவனங்களில், சுமார் 2,65,000 மாணவர்கள் பயின்று வருகிறார்கள் என்றால், இதைவிட பெருமை வேறு எதுவும் நிச்சயமாக இருக்க முடியாது. மருத்துவக் கல்விப் புரட்சியின்' மகத்தான அடையாளமாக தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. கல்வியையும் - ஆராய்ச்சியையும் இரண்டு கண்களாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே முன்மாதிரி பல்கலைக்கழகமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகமானது, கொரோனா காலத்தில் மிகச் சிறந்த சேவையை ஆற்றியிருக்கிறது. கொரோனாவை தடுப்பதற்கான ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டது. கொரோனா காலத்து மனச்சிக்கலை நீக்குவதற்காக பொதுமக்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை இணையம் மற்றும் தொலைபேசி வழியாக சேவையாற்றி இருக்கிறது. கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

பல்கலைக்கழக மாணவர்கள், செவிலியர்கள் மாநிலம் முழுவதும் பல்வேறு ஊர்களில் விழிப்புணர்வுப் பணிகளில் ஈடுபட்டு இருக்கிறார்கள். 8400 மாணவர்கள் இதற்கான சிறப்புச் சான்றிதழ் பெற்றுள்ளார்கள். அவர்கள் அனைவரையும் இந்த நிகழ்ச்சியின் மூலமாக பாராட்டுகிறேன், என்னுடைய வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தகைய விழிப்புணர்வு பணி தொடர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

உங்களில் பலருக்கு மருத்துவம் என்பது, உங்களது கனவாகவோ - சிலருக்கு , பெற்றோர் - உறவினர்கள் கனவாகவோ இருந்திருக்கும். ஆனால், மருத்துவம் படிக்க நீங்கள் கல்விச்சாலைக்குள் நுழையும்போது அது அந்தக் கல்விச்சாலையின் கனவாக மாறிவிடுகிறது.

மருத்துவப் பட்டத்தை நீங்கள் பெற்ற பிறகு, அது இந்த நாட்டின் கனவாக மாறுகிறது ! அந்த அடிப்படையில் பார்த்தால் தனிமனிதர்களாக இருந்த நீங்கள் இன்று முதல் நாட்டுக்குச் சேவையாற்றும் மாபெரும் மனிதர்களாக மாறுகிறீர்கள். அத்தகைய மாபெரும் மனிதர்களாகிய உங்களை இந்த நாடு வரவேற்கிறது அதேபோல தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில் உங்களை நாட்டுக்குச் சேவையாற்ற அன்போடு அழைக்கிறேன்.

மருத்துவம் என்பது வேலை அல்ல அது ஒரு சேவை! மதிப்பும், மரியாதையும் போற்றுதலும், பாராட்டுதலும் உள்ள சேவையைத்தான் நாளை முதல் நீங்கள் தொடங்க இருக்கிறீர்கள்.

இரவு பகல் பாராது. மழை வெயில் பாராது. ஆண் பெண் பேதம் இல்லாமல், இந்தச் சாதி - அந்த மதம் என்ற பேதம் இல்லாமல், ஏழை பணக்காரர் என்ற வேற்றுமை பாராது, தனக்கு முன்னால் இருப்பது ஒரு உயிர் என்ற உன்னதமான எண்ணத்தோடு அந்த உயிரைக் காக்கும் கடமையை நீங்கள் செய்யப் போகிறீர்கள்.

இதுவரை உங்கள் வீட்டுக்குப் பிள்ளையாக இருந்த நீங்கள் இனி இந்த நாட்டுக்குப் பிள்ளையாக மாறப் போகிறீர்கள். உங்களுக்கு நான் அதிகப்படியான அறிவுரைகளை சொல்லத் தேவையில்லை. பெரிய படிப்பை - பெரிய பெரிய புத்தகங்களைப் படித்தவர்கள் நீங்கள். 'நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்.

வாய் நாடி வாய்ப்பச் செயல்' என்ற வள்ளுவரின் குறட்பாவை மட்டும் உங்களுக்கு நான் நினைவூட்டக் கடமைப்பட்டு இருக்கிறேன்.நோய் இன்னது என்று கண்டுபிடியுங்கள். அதற்கான காரணத்தைக் கண்டுபிடியுங்கள். அதைத் தீர்க்கும் வழியைக் கண்டுபிடியுங்கள். அந்த உடலுக்கு பொருத்தமான வழிமுறையைச் சொல்லுங்கள். -இதுதான் வள்ளுவர் சொல்வது. இதனை நெஞ்சில் நிறுத்தி கடமையாற்றுங்கள்.

டாக்டர் உபேந்திரநாத் பிரம்மச்சாரி, ஆர்தர் சரவணமுத்து தம்பையா, டாக்டர் கமலம், எழுத்தாளர் சார்வாகன் என அறியப்பட்ட டாக்டர் சி.சீனிவாசன் போன்று திறமை படைத்தவர்களாக நீங்கள் உங்களை தகுதிப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். அத்தகைய கண்டுபிடிப்பாளர்களாக நீங்கள் உங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும்.

இந்தியாயவில் எத்தனையோ மருத்தவர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் பி.சி.ராய் பிறந்த தினம் எதற்காக மருத்துவர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது?

இந்தியா சுதந்திரத்திற்காக போராட்டம் நடத்திக் கொண்டு இருந்தபோது, "இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்க வேண்டுமானால் மக்களின் மனமும் உடலும் உறுதியாக இருக்க வேண்டும்" என்று வலியுறுத்திக் கொண்டு இருந்தவர் பி.சி.ராய் அவர்கள். அதனால் தான் அவர் நினைவுபடுத்தப்படுகிறார்.

சென்னை மாகாணத்தின் சட்ட மேலவைக்கு ஒரு பெண்ணை உறுப்பினராக்க வேண்டும் என்று நினைத்தபோது டாக்டர் முத்துலட்சுமி அம்மையாரை நியமித்ததற்குக் காரணம் அவரிடம் இருந்த சமூக அக்கறைதான்.

எத்தனையோ மருத்துவர்கள் இருக்க, சென்னை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் டாக்டர் ரங்காச்சாரி அவர்களுக்கு எதற்காக சிலை வைக்கப்பட்டது என்று சொன்னால், மக்களின் மருத்துவராக அவர் இருந்தார். மக்கள் பணம் வசூலித்துக் கொடுத்து வைக்கப்பட்ட சிலை அது.

சென்னைக்கு படிக்க வரும் மாணவர்கள் வசதிக்காக 'திராவிடன் இல்லம்' என்ற விடுதியைத் தொடங்கியவர் டாக்டர் நடேசனார் அவர்கள். தமிழ்நாட்டு இளைஞர்கள் கல்வியில் வேலைவாய்ப்பில் முன்னேற வேண்டும் என்பதற்காக சமூகநீதியை நிலைநாட்ட இலண்டன் சென்று பிரிட்டிஷ் மன்னரிடம் வாதாடி, அங்கேயே மரணம் அடைந்த டாக்டர் டி.எம்.நாயர், அவரும் மருத்துவத் துறையைச் சார்ந்தவர்தான் என்பதை நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன்.

அந்த வகையில், மருத்துவக் கண்டுப்பிடிப்பாளர்களாக - சமூக அக்கறை கொண்டவர்களாக வளர்ந்து பெயர் பெற வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். இந்தப் பட்டம் வாங்கியதோடு உங்கள் படிப்பு முடிந்துவிடவில்லை. இனிமேல்தான் புத்தகப் படிப்போடு சேர்ந்து சமூகத்தையும் நீங்கள் படிக்கப் போகிறீர்கள். படித்துக் கொண்டே சேவையாற்றப் போகிறீர்கள். அத்தகைய மருத்துவர்களாகிய உங்களுக்கு தமிழ்நாடு அரசு நிச்சயமாக உறுதுணையாக இருக்கும்.

மாவட்டம்தோறும் மருத்துவக் கல்லூரிகள் உருவாக்க வேண்டும் என்பது முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் சிந்தனையில் உதித்த திட்டமாகும். 2006-ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் அதைச் சொல்லி அதன்படி பல்வேறு மாவட்டங்களில் உருவாக்கத் தொடங்கினோம். அதுதான் பல்லாயிரக்கணக்கான மருத்துவர்கள் உருவாகக் காரணமாக அமைந்தது.

* புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு அனுமதி பெற்று அதனை தொடங்கி வைக்கும் விழா விரைவில் நடக்க இருக்கிறது.

* வருமுன் காப்போம் என்ற திட்டத்தின் மூலமாக பல்லாயிரக்கணக்கான மருத்துவ முகாம்களை நடத்தி, கோடிக்கணக்கான மக்களுக்கு மருத்துவ உதவிகள் கிடைக்க வழிவகை செய்தோம்.

ஆரம்ப சுகாதார நிலையங்களை அதிகம் உருவாக்கினோம். பெரும்பாலான ஆரம்ப சுகாதார நிலையங்களை 24 மணிநேரமும் செயல்படும் வகையில் மருத்துவப் பணியாளர்களை நியமித்தோம். உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வழங்கிய மாபெரும் கொடை ஆகும். குழந்தைகள் உயிர் காத்திட அறுவைச் சிகிச்சைகளுக்கு நிதி உதவிகளை அதிகம் அளித்தவரும் முத்தமிழறிஞர் கலைஞர்

அவர்கள்தான். * இளம் சிறார் இதய அறுவைச் சிகிச்சைத் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தினோம்.

* 108 அவசர ஊர்தி ஆம்புலன்ஸ் சேவையை உருவாக்கிக் கொடுத்தவரும் தலைவர் கலைஞர் அவர்கள்தான்.

2 கோடியே 11 இலட்சம் பேர் பயன் பெறக்கூடிய வகையில் பொதுமக்களிடம் நேரடியாகச் சென்று மருத்துவ உதவிகளை அளிக்கும் 'நலமான தமிழகம்' என்ற புதிய திட்டத்தை இந்தியாவிலேயே முதலில் தொடங்கியது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய ஆட்சிக்காலத்தில்தான்.

அந்த வரிசையில் இப்போதும் பல்வேறு திட்டங்களை தொடங்கி இருக்கிறோம்.

* 'மக்களைத் தேடி மருத்துவம்' என்ற திட்டத்தின் மூலமாக இதுவரை 44 இலட்சம் மக்கள் பயனடைந்திருக்கிறார்கள்.

'இன்னுயிர் காப்போம்' திட்டத்தை மேல்மருவத்தூரில் இரண்டு நாட்களுக்கு முன்பு நானே நேரடியாகச் சென்று தொடங்கி வைத்துள்ளேன்.

கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. * மரபணு மாற்றம் கண்டறியும் பகுப்பாய்வுக் கூடம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. * மனவளர்ச்சி குன்றிய ஆதரவற்ற நோயாளிகளுக்கு மீட்பு சேவை தொடங்கப்பட்டுள்ளது.

* குழந்தைகள் இணையத் தள அடிமை ஆவதைத் தடுக்க ஆலோசனை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்ட ஐம்பது வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு புற்றுநோய் கண்டுபிடிப்பு பரிசோதனை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

*8 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு 139.8 கோடி ரூபாய் நிதி அளிக்கப்பட்டுள்ளது.

* 188 ஆம்புலென்ஸ்கள் புதிதாக வாங்கப்பட்டுள்ளது. மருத்துவ நூல்கள் மக்கள் மொழியில் இருப்பது தான் மக்களாட்சி. அந்த அடிப்படையில் தமிழ் மொழியில் மருத்துவ நூல்களை மொழி பெயர்த்து வெளியிட்டு வருகிறோம்.

* இவை அனைத்துக்கும் மேலாக இதுவரை 8 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் தடுப்பூசி செலுத்துவதை ஒரு இயக்கமாகவே நாம் நடத்தி வருகிறோம். சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறோம். அதிகபட்சமாக 30 லட்சம் தடுப்பூசிகள் ஒரே நாளில் செலுத்தப்பட்டுள்ளது.

இது மக்களின் நல்வாழ்வின் மீது அக்கறை கொண்ட அரசாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வரும் இந்த வேளையில், நீங்கள் மருத்துவர்களாக சேவையாற்ற வந்துள்ளீர்கள். உங்கள் அனைவரையும் மனதார, உளமார, மகிழ்ச்சியுடன், பெருமையுடன் வருக, வருக என வரவேற்கிறேன்.

இந்த இனிமையான தருணத்தில் உங்களிடம் ஒரு கோரிக்கை வைக்க நான் நினைக்கிறேன். நீங்கள் என் கோரிக்கையை நிறைவேற்றித் தருவீர்களா? என்ற அந்தக் கேள்வியை மட்டும் கேட்டு, மீண்டும் ஒருமுறை உரக்கச் சொல்கிறேன், நீங்கள் நிறைவேற்றி தரவேண்டும், தரவேண்டும் என்று இந்த நேரத்தில் கேட்டு, இன்றைய காலக்கட்டத்தில் கிராமப்புற மருத்துவச் சேவை என்பது பெரும் சவாலாக உயர்ந்திருக்கிறது. மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு, மருத்துவராகப் பணியாற்ற நீங்கள் கிராமப்புற சேவைகளில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். நகர்ப்புறங்களிலிருந்தும், கிராமப்புறங்களிலிருந்தும் வந்திருக்கும் நீங்கள், கிராமப்பகுதிக்குச் சென்று மருத்துவச் சேவை ஆற்றுவது கடமை என நினைத்துச் செயல்படுங்கள். நீங்கள் அனைவரும் மக்கள் மருத்துவர்கள் என்ற சிறப்பான பெயரை பெற வேண்டும் என்று உங்களை மனதார வாழ்த்தி விடைபெறுகிறேன். இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.



Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!