மயிலாடுதுறையில் டாஸ்மாக் மதுபானக் கடையில் இளைஞர் குத்திக் கொலை
மதுபான கடையில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டவர்
மயிலாடுதுறை நகரில் 5 டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. இதில் சட்டத்திற்கு புறம்பாக பார் நடத்தப்பட்டு வருகிறது. டாஸ்மாக் மதுபானக்கடைகள் இரவு வேலைநேரம் முடிந்தபின் பூட்டப்பட்டாலும், அதன் அருகில் செயல்படும் பார்களில் இரவு முழுவதும் மது விற்பனை காலைவரை தொடர்ந்து நடைபெறுகிறது.
இந்நிலையில், மயிலாடுதுறை கீழநாஞ்சில்நாடு வடக்குத்தெருவைச் சேர்ந்த சங்கர் மகன் ஜீவானந்தம் (23) என்ற இளைஞர், தங்கள் பகுதியில் நடைபெறும் கோயில் விழாவுக்காக மொத்தமாக மது வாங்க, பழைய பேருந்து நிலையம் அருகில் பஜனை மடம் சந்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு நேற்று நள்ளிரவு சென்றுள்ளார்.
அப்போது, அந்த பாரில் மதுவிற்பனையில் ஈடுபட்டிருந்த தமிழ்மணி என்பவர் அதிக விலைக்கு மது விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது. மொத்தமாக வாங்குவதால் விலை குறைத்துத் தருமாறு ஜீவானந்தம் கேட்டுள்ளார். இதற்கு தமிழ்மணி மறுப்புத் தெரிவித்ததால் வாக்குவதாதத்தில் ஈடுபட்ட ஜீவானந்தம் திரும்பச் சென்று தங்கள் பகுதியைச் சேர்ந்த 3 இளைஞர்களை உடன் அழைத்து வந்து தமிழ்மணியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த தமிழ்மணி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜீவானந்தத்தின் நெஞ்சில் குத்தியதில் ஜீவானந்தம் படுகாயம் அடைந்தார். அவரை நண்பர்கள் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே ஜீவானந்தம் பரிதாபமாக உயிரழந்தார்.
இதையடுத்து, மயிலாடுதுறை போலீசார் ஜீவானந்தத்தின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தமிழ்மணியைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu