மகளிர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தினர் முற்றுகை போராட்டம்
முற்றுகை போராட்டம் பற்றி மகளிர் பால் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் பேட்டி அளித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகாவில் நாகம்பாடி, பாலையூர் கீழமூலை ஆகிய பகுதிகளில் உள்ள மகளிர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தினர் தங்கள் உறுப்பினர்களிடமிருந்து வாங்கும் பால் வைத்தீஸ்வரன்கோவில் ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திற்கு காலை மாலை என இரு வேளைகளும் வழங்கி அதன்மூலம் வருவாய் ஈட்டி வந்தனர்.
திடீரென கடந்த இரண்டு மாதங்களாக வைத்தீஸ்வரன்கோவில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திற்கு பதிலாக திருவாரூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தினர் மகளிர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தினரிடம் பால் கொள்முதல் செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி முதல் திருவாரூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் இருந்து பால் கொள்முதல் செய்வதற்காக வரும் வாகனம் முன் அறிவிப்பு எதுவும் இன்றிநிறுத்தப்பட்டு விட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது தூரம் அதிகமாக இருப்பதால் பால் கொள்முதல் செய்ய வாகனம் அனுப்பவில்லை என தெரிவித்துள்ளனர்.
இந்த திடீர் முடிவால் மகளிர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தினர் சேமித்த பால் வீணானதுடன், அச்சங்கத்தின் உறுப்பினர்கள் வருவாய் இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து சங்க உறுப்பினர்கள் இன்று மயிலாடுதுறை மாவட்ட அலுவலகத்திற்கு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவினை ஆட்சியர் அலுவலக அதிகாரிகளிடம் வழங்கினர். அந்த மனுவில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தினர் பால் வண்டியை அனுப்பி நாகம்பாடி, பாலையூர் கீழமூலை மகளிர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தினரிடம் பால் கொள்முதல் செய்து தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். அதிகாரிகள் இரண்டு நாளில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் மகளிர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu