தஞ்சாவூரில் எஸ்.எம்.ஏ குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தையை ஒன்றிணைந்து காப்போம்
காவல்துறையினரின் பாராட்டைப் பெற்ற பெண் காவலர் அஸ்வினி
தஞ்சாவூரில் எஸ்.எம்.ஏ. குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தை பாரதியை அனைவரும் இணைந்து காப்பாற்றுவோம் என்று மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த முதுநிலை பெண் காவலர் சமூக வலைதளங்களில் விடுத்துள்ள அழைப்பு வைரலாகிவருகிறது காவல்துறையினர் பாராட்டு.
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் காவல் சரகத்தில் முதுநிலை காவலராக பணிபுரிபவர் எஸ்.அஸ்வினி. காவல்துறையில், இரவுபகல் பார்க்காமல் வேலை பார்ப்பதால் ஏற்படும் பணிச்சுமை மற்றும் மனச்சோர்வினை சமூக வலைதளங்களில் நகைச்சுவை பதிவுகளை பதிவிடுவதன்மூலம் குறைத்து வந்துள்ளார். எப்போதும், பணிச்சுமையை மனதில் ஏற்றி மனமகிழ்ச்சியைக் கெடுத்துக்கொள்ளக்கூடாது என்ற கொள்கையுடன் உள்ள இவரை காவல் துறையிலேயே சமூக வலைதளங்களில் பின்தொடர்வோரின் (பாலோயர்ஸ்) எண்ணிக்கை அதிகம். இந்நிலையில் தஞ்சாவூரைச் சேர்ந்த ஜகதீஷ்-எழிலரசி தம்பதியினரின் 21 மாத குழந்தை பாரதி ஸ்பைனல் மஸ்குலர் அட்டாக் (எஸ்.எம்.ஏ) என்கிற முதுகுத்தண்டுவட தசைநார் லெவல் 2 குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள செய்தியை கேள்வியுற்று அஸ்வினி மனவேதனை அடைந்தார்.
குழந்தையின் சிகிச்சைக்காக காவல்துறையில் பணியாற்றும் நண்பர்கள் தங்களால் இயன்ற தொகையை வழங்கியுள்ளனர். அதன்பின்னும் திருப்தி அடையாத அஸ்வினி, குழந்தைக்கு உதவ அனைவரும் சேர்ந்து கைகொடுப்போம் என சமூக வலைதளங்களில் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், தஞ்சாவூரைச் சேர்ந்த எஸ்எம்ஏ குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள 21 மாத குழந்தை பாரதிக்கு வெளிநாட்டில் இருந்து 16 கோடி மதிப்புடைய மருந்தினை இறக்குமதி செய்ய வேண்டும் என்றும், சாமானியர்களுக்கு இது சாத்தியப்படாது என்பதால், அனைவரும் ஒன்றிணைந்து குழந்தையைக் காப்பாற்றுவோம் என்றும் அழைப்பு விடுத்துள்ளார். இவரது பதிவுக்கு நல்ல பலனும் கிடைத்து வருகிறது. இவரது வேண்டுகோளை ஏற்று பலரும் குழந்தை பாரதிக்கு உதவி செய்து வருகின்றனர். மேலும், அஸ்வினியின் சமூக அக்கறை மற்றும் உதவும் குணத்தை காவல் அதிகாரிகள் பலரும் பாராட்டி வருகின்றனர். அஸ்வினியின் கணவர் உத்திராபதியும் காவல் துறையில் முதுநிலை காவலராக பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu