மயிலாடுதுறையில் போலீசாரை கண்டித்து வி.சி.க. வினர் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் போலீசாரை கண்டித்து வி.சி.க. வினர் ஆர்ப்பாட்டம்
X

மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த கண்டன கூட்டத்தில் பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன் பேசினார்.

அம்பேத்கர் படம் தொடர்பான பிரச்சினையில் மயிலாடுதுறையில் போலீசாரை கண்டித்து வி.சி.க. வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறையை அடுத்த பட்டவர்த்தி பகுதியில் கடந்த டிசம்பர் 6-ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவு தினத்தில் அம்பேத்கர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது தொடர்பாக இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் ஈழவளவன் தலைமையில் அம்பேத்கர் படத்துக்கு மரியாதை செய்த போது மோதல் ஏற்பட்டது. இரண்டு தரப்பினரும் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். காவல்துறையினர் லேசாக தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக இரண்டு தரப்பினர் மீதும் மணல்மேடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் அம்பேத்கர் உருவ படம் வைத்து அஞ்சலி செலுத்த எதிர்ப்பு தெரிவித்து மோதலில் ஈடுபட்டவர்களை கண்டித்தும், எதிர்ப்பு தெரிவித்த அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தியும், கலவரத்தை தடுக்காத காவல் துறை, வருவாய் துறையினரை கண்டித்தும் மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னாள் மாவட்ட செயலாளர் ஈழவளவன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தால் கச்சேரி சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக நாட்டுப்புற கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. மயிலாடுதுறை, நாகப்பட்டினம் தஞ்சாவூர் ஆகிய மூன்று மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.

Tags

Next Story
சிறுநீரகத்துல நச்சுக்கள் இருக்கா ?..உடனே வெளியேற்ற இந்த சில பழங்கள சாப்டுங்க..!| Best fruits for kidney cleansing naturally in tamil