பக்தர்களின்றி நடந்தது வைத்தீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம்!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில், தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகி அம்மன் உடனுறை வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோவிலில் தனி சன்னதிகளில் செல்வமுத்துக்குமாரசாமி, செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன், தன்வந்திரி ஆகிய சுவாமிகள் அருள்பாலிக்கின்றனர்.
தீராத நோய்களை தீர்க்கும் தலமாக இக்கோயில் விளங்கி வருகிறது. பிரசித்தி பெற்ற இக்கோயிலில், 23 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, தமிழக அரசின் கொரோனோ பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு உட்பட்டு, பக்தர்கள் பங்கேற்பின்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவையொட்டி, 8 கால யாகசாலை பூஜைகள், கடந்த 24ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வந்தது. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கலசங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. இன்று காலை வைத்தீஸ்வரன் கோவிலில் நான்கு ராஜகோபுரங்கள், கற்பக விநாயகர், வைத்தியநாதசுவாமி, தையல் நாயகி அம்பாள், செல்வ முத்துக்குமாரசாமி, அங்காரகன் ஆகிய சுவாமிகளின் மூலவர் விமானங்கள், விமான கலசங்களுக்கு குடமுழுக்கு விழா நடைபெற்றது.
கோவில் கும்பாபிஷேகத்தை கண்காணிக்க, உயர் நீதிமன்றத்தால் ஐஏஎஸ் அதிகாரி விக்ராந்ராஜா, உயர்நீதிமன்ற சிறப்பு அரசு வழக்கறிஞர் கார்த்திகேயன் பார்வையாளராக நியமிக்கப்பட்டிருந்தன்ர். 144 தடை உத்தரவு போடப்பட்டு இருந்ததால் பக்தர்கள் நகருக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.
தருமபுர ஆதின 27வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் திருமதி லலிதா, இந்து அறநிலை துறை இணை ஆணையர் அசோக் குமார் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu