திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம்: யாகசாலை பூஜை துவக்கம்
6வது கால யாகசாலை பூஜையை தருமை ஆதீனம் 27வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் துவக்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் புகழ்பெற்ற தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் உள்ளது.
தேவாரப்பாடல் பெற்றதும், மார்க்கண்டேயனுக்காக எமனை வதம் செய்த அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றான இக்கோயில் சஷ்பயப்தபூர்த்தி, பீரமரதசாந்தி, சதாபிஷேகம் மற்றும் 90, 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் சிறப்பு ஹோமங்கள் நடத்தி சுவாமி அம்பாளை வழிபட்டால் ஆயுள் விருத்தி கிடைக்கும் என்பது ஐதீகம். அம்பாள் தனது பகக்தரான அபிராமி பட்டருக்காக அமாவாசையை பௌர்ணமியாக்கிய புராண நிகழ்வு நடைபெற்ற ஸ்தலம். வருடத்தின் 365 நாட்களும் திருமணங்களும்,யாகங்களும் நடைபெறும் ஒரே ஸ்தலமாகும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலில் தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சீரிய முயற்சியால் திருப்பணி வேலைகள் செய்யப்பட்டு 25 ஆண்டுகளுக்கு பிறகு நாளை 27ம் தேதி காலை 10 மணிக்கு மேல் 11 மணிக்குள் மகாகும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
அதையொட்டி 72 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 8 கால பூஜைகள் நடைபெற்று வருகிறது.120 வேத விற்பன்னர்கள் 27 திருமுறை ஓதுவார்கள் திருமுறை பாராயணம், அபிராமி அந்தாதி பாராயணம், 1 லட்சம் மிருத்திங்கா ஜெபம் ஆகிய வைபவங்கள் நடந்து வருகிறது.
கடந்த 23 ஆம் தேதி முதல்கால யாகசாலை பூஜை தொடங்கி தினமும் இரண்டுகால யாகசாலை பூஜைகள் நடந்து வருகிறது. 4வது நாளான இன்று 6வது கால யாகசாலை பூஜையை தருமை ஆதீனம் 27வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் துவக்கி வைத்தார்.
கஜ பூஜை,கோ பூஜையை தொடர்ந்து 6வது கால யாகசாலை பூஜை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்து வருகிறனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu