திருக்கடையூர் கோயில் கும்பாபிஷேக எட்டாவது கால யாகசாலை பூஜை துவங்கியது
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயம்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் புகழ்பெற்ற தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில் உள்ளது. தேவாரப்பாடல் பெற்றதும், மார்க்கண்டேயனுக்காக எமனை வதம் செய்து மார்க்கண்டேயனுக்கு என்றும் சிரஞ்சீவி என்ற வரம் அளித்த தலம். அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றான இக்கோயிலில் 60 வயதில் சஷ்டியப்தபூர்த்தி, 70 வயதில் பீமரதசாந்தி, 80ல் சதாபிஷேகம் மற்றும் 90ல் மகா அபிஷேகம், 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் கனகாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு வகையான சிறப்பு ஹோமங்கள் நடத்தி சுவாமி அம்பாளை வழிபட்டால் ஆயுள் விருத்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயில் தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் 25 ஆண்டுகளுக்கு பிறகு இன்று காலை 10 மணிக்கு மேல் 11 மணிக்குள் மகா கும்பாபிஷேக பெருவிழா நடைபெறுகிறது.
கடந்த 23ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கி தற்போது 8-வது யாகசாலை பூஜை நடைபெற்று வருகிறது. தஞ்சை சரக டிஐஜி கயல்விழி மேற்பார்வையில் 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தஞ்சை நாகை மயிலாடுதுறை ஆகிய மூன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல்துறை அடங்கிய போலீசார் 1200 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கும்பாபிஷேக விழாவில் அனுமதிச் சீட்டு பெற்றவர்கள் மட்டுமே கோயில் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனா வழிகாட்டு விதிமுறைகளால் கும்பாபிஷேகம் முடிந்த பின்னர் 12 மணிக்கு பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவுள்ளனர். கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக தற்காலிக குடிநீர் வசதி, கழிப்பிட வசதி சுகாதாரத் துறை மருத்துவ முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu