தேரழுந்தூரில் ஆமருவியப்பன் பெருமாள் கோயில் தேரோட்டம்

தேரழுந்தூரில் ஆமருவியப்பன் பெருமாள் கோயில்  தேரோட்டம்
X

ஆமருவியப்பன் பெருமாள் கோயில் தேரோட்டம்

தேரழுந்தூரில் அமைந்துள்ள 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆமருவியப்பன் பெருமாள் கோயில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தரிசனம் செய்தனர்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே தேரழுந்தூரில் பழமை வாய்ந்த செங்கமலவல்லி உடனாகிய ஸ்ரீஆமருவியப்பன் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

கவிச்சக்கரவர்த்தி கம்பன் பிறந்த ஊரான இங்கு அமைந்துள்ள இந்த ஆலயம் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும் திருமங்கை ஆழ்வாரால் 45 பாசுரங்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் 10-வது திவ்ய தேசமாகும்.

இக்கோவிலில் மூலவர் ஸ்ரீதேவாதிராஜன் என்ற பெயரிலும், உற்சவர் ஆமருவியப்பன் என்ற பெயரிலும் அருள்பாலிக்கின்றனர். புகழ் வாய்ந்த இவ்வாலயத்தின் வைகாசி பிரம்மோத்ஸவப் பெரு விழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தினம் தோறும் பெருமாள் வீதிஉலா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. செங்கமலவல்லி உடனாகிய ஆமருவியப்பன் பெருமாள் தேரில் எழுந்தருள செய்யப்பட்டு திருமஞ்சனம் நடைபெற்றது.

தொடர்ந்து தீபாராதனை செய்யப்பட்டு தேரோட்டம் துவங்கியது. பக்தர்கள் பாண்டு ரங்கா கோவிந்தா கோபாலா என்ற கோஷத்துடன் வேண்டி தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதிகளில் தேர் வலம் வந்து நிலையை அடைந்தது. ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story