மயிலாடுதுறை அருகே அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் தற்கொலை முயற்சி
தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட ஆசிரியர் செந்தில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மயிலாடுதுறை மாவட்டம் கோமல் அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலை ஆசிரியராக பணி புரிபவர் செந்தில். இவர் இன்று தலைமை ஆசிரியரிடம் பாடக்குறிப்பு கையொப்பம் வாங்க சென்றபோது தலைமை ஆசிரியர் திட்டியுள்ளார், இதனால் மனம் உடைந்த செந்தில் திடீரென்று பள்ளி வளாகத்திலேயே பூச்சிமருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். மயங்கி விழுந்த செந்திலை மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பள்ளியின் ஒட்டுமொத்த ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர்கழகத்தினர் அரசு மருத்துவமனையில் கூடினர்.
இது தொடர்பாக பெற்றோர் ஆசிரியர்சங்க தலைவர் ராகவன் செய்தியாளர்களிடம் கூறுகையில் தலைமை ஆசிரியை சித்ரா கடந்த 8 மாதத்திற்கு முன்பு வந்ததிலிருந்து ஆசிரியர்களுக்கு மரியாதை அளிக்காமல் மாணவர்கள் மத்தியில் திட்டுவதும் பள்ளிக்கு காலை 10 மணிக்கு மேல்வருவதும் ஆசிரியர்களை தன் அறைக்கு வரவழைத்து நீண்டநேரம் செருப்பு இல்லாமல் நிற்க வைப்பதும் ஆசிரியர்களையும் பெற்றோர் ஆசிரியர்கழகத்தினரையும் அவமரியாதை செய்வதும் வாடிக்கையாக வைத்து உள்ளார்.
நாங்கள் பலமுறை எடுத்துக்கூறியும் தவறை திருத்திகொள்வதில்லை, மிகவும் சிறப்பாக பாடம் எடுப்பதில் பெயர் வாங்கிய இந்தசெந்திலை வேண்டுமென்றே திட்டுவதும் பாடக்குறிப்பில் கையொப்பம் போடாமல் நடவடிக்கை எடுக்கப்போகிறேன் என்று அடாவடித்தனமாக செயல்படுகிறார் தன் அறைக்குவரும் ஆசிரியர்களை செருப்பை வெளியிலேயே கழட்டிப்போடவேண்டும் என்பார் இவர் செருப்புடன் உட்கார்ந்திருப்பார்.
இந்தக்கிராமத்துப் பள்ளியில் 1082 மாணவர்கள் உள்ளனர், இங்கே உள்ள ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் வேலை பார்த்துவருகின்றனர், தலைமை ஆசிரியர் வந்ததிலிருந்து ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர், ஒட்டுமொத்த ஆசிரியர்களும் இவரால் வேதனையில் உள்ளனர், உடனடியாக மாவட்டக்கல்வித்துறை விசாரணை மேற்கொண்டு இவர் பள்ளிக்கு எத்தனை மணிக்கு வருகிறார் என்பதை சி.சி.டி.வி. கேமராவின்மூலம் ஆராய்ந்தும் செந்திலை தற்கொலைக்குத்தூண்டிய வழக்கைப் பதிவுசெய்தும் இவர்மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் அதுவரை எங்கள் போராட்டம் தொடரும் என்று கூறியுள்ளார். தலைமை ஆசிரியர்மீது நடவடிகை எடுக்கப்படும்வரை உள்ளிருப்புப் போராட்டம் தொடரும் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.இதுபற்றி பாலையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu