சீர்காழி: நான்கு வழி சாலைக்கு நிலம் கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு

சீர்காழி: நான்கு வழி சாலைக்கு நிலம் கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு
X

சீர்காழி அருகே நான்குவழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணிக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சீர்காழி அருகே நான்கு வழி சாலைக்கு நிலம் கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து பணியை தடுத்து நிறுத்தினர்.

விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் முதல் புத்தூர் வரை ஒன்பது கிலோ மீட்டர் தூரத்திற்கு 70 ஏக்கர் விவசாய விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. நிலங்களை கையகப்படுத்தும் பணியின்போது நிலத்திற்கான சந்தை மதிப்பு அல்லது அரசின் வழிகாட்டு மதிப்பு இரண்டில் எது அதிகமாக உள்ளதோ அதைவிட மூன்று மடங்கு கூடுதலாக வழங்குவதாக அறிவித்து நில உரிமையாளர்களிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் நிலத்தின் அரசு வழிகாட்டு மதிப்பு 40 ரூபாய் இருக்கும் நிலையில் சதுர அடி ஒன்றுக்கு ரூ 2. 60 முதல் ரூ 4 மட்டுமே அரசு வழங்கியதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனை எதிர்த்து உரிய இழப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் இன்று புத்தூர் பகுதியில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியை தனியார் ஒப்பந்த நிறுவனம் துவங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் தங்களது நிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை அரசு அறிவித்தபடி வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் உரிய இழப்பீடு தொகை வழங்கும் வரை தங்களது நிலத்தில் எந்த பணியையும் தொடங்கக் கூடாது எனவும் எதிர்ப்பு தெரிவித்து பணியை தடுத்து நிறுத்தினர்.

தகவலறிந்து வந்த கொள்ளிடம் போலீசார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்படி தங்கள் நிலத்திற்கான இழப்பீட்டு தொகை குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு வழங்கப்பட்டால் மட்டுமே தங்கள் இடத்தில் பணிகளை தொடர வேண்டும் என உறுதியாக தெரிவித்து விவசாயிகள் கலைந்து சென்றனர். இதனால் நான்கு வழிச்சாலைக்கு சாலை அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

Tags

Next Story
ai marketing future