மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முற்றுகை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா நெப்பத்தூர் கிராமத்தில் தனியார் செங்கல் சூளையில் நிம்மேலியை சேர்ந்த கூலி தொழிலாளி சீனிவாசன்40. கடந்த 17ம் தேதி தூக்கில் தொங்கிய நிலையில் மர்மமான முறையில் இறந்ததால் உறவினர்கள் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனடியாக சீனிவாசனின் உடலைக் கைப்பற்றிய திருவெண்காடு போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
தொடர்ந்து போலீசார் தற்கொலைக்கு தூண்டியது, தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து சூளை உரிமை யாளர் சுரேஷ். அவரது மகன் சித்தார்த். மற்றும் சூப்ரவைசர் மோகன்ராஜ் ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆனால் கொலை வழக்காக மாற்ற வேண்டும் சிபிசிஐடி விசாரணை நடத்தவேண்டும் செங்கல் சூளைக்கு சீல் வைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சீனிவாசன் உடலை வாங்காமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தால் செங்கல் சூளைக்கு சீல் வைக்கப்பட்டது. பத்தாவது நாளான இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விடுதலை சிறுத்தை கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் ஈழவளவன் தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தை, சிபிஐ எம்எல் உள்ளிட்ட பல்வேறு கட்சி மற்றும் அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது காவல்துறையினர் வைத்திருந்த பேரிகார்டு தடுப்புகளை அகற்ற முயற்சித்தனர். போலீசார் தடுத்ததால் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
சீனுவாசன் வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்யக்கோரி இரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 800க்கும் மேற்பட்டோர் 2 மணி நேரத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து இரண்டு அணியினரின் முக்கிய பொறுப்பாளர்களை அழைத்து மாவட்ட ஆட்சியர் லலிதா பேச்சுவார்த்தை நடத்தினார். வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது, இறந்த சீனிவாசனின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை தொடர்ந்து போராட்டம் விளக்கி கொள்ளப்பட்டது.
இறந்த சீனிவாசன் உடலை மறுபிரேதபரிசோதனை செய்வது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட்மனு தாக்கல் செய்ய்பட்டுள்ளதால் புதன்கிழமையன்று உடலை பெற்றுகொள்வதாக போராட்டக்காரர்கள் கூறினர். 10 நாட்களாக நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்த போராட்டத்தை ஒட்டி 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu