சீர்காழி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை
சீர்காழி அரசு மருத்துவமனை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த அரசு மருத்துவமனையில் தான் சீர்காழி நகர் பகுதி மக்கள் மற்றும் வைத்தீஸ்வரன் கோவில், கொள்ளிடம், திருவெண்காடு, மாதானம், புதுப்பட்டினம், பழையாறு, திருமுல்லைவாசல், எடமணல், மகேந்திரப்பள்ளி, புத்தூர், குன்னம், பெரம்பூர், கொண்டல், அகனி, வள்ளுவக்குடி, திருப்புன்கூர், பெருமங்கலம், ஆதமங்கலம், பூம்புகார், மங்கைமடம், கதிராமங்கலம், எடக்குடி, வடபாதி, வானகிரி, பெருந்தோட்டம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற வேண்டி உள்ளது.
இல்லையெனில் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிதம்பரம், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று தான் சிகிச்சை பெற வேண்டும். சீர்காழி அரசு மருத்துவமனைக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புற நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் 500க்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த மருத்துவமனையில் மிகவும் குறைவான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.
இதனால் இந்த மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் போதிய மருத்துவர்கள்- செவிலியர்கள் இல்லாத காரணத்தால் நீண்ட நேரம் காத்திருந்து சிகிச்சை பெற வேண்டிய நிலையில் உள்ளனர்.
மேலும் இரவு நேரங்களில் போதிய மருத்துவர்கள் பணியில் இல்லாததால் சீர்காழி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். நீண்ட தூரம் செல்வதால் அடிக்கடி உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது.
மேலும் கடந்த சில மாதங்களாக இங்கு மகப்பேறு பெண் மருத்துவர்கள் இல்லாததால் கர்ப்பிணி பெண்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர். அறுவை சிகிச்சை என்றால் சிதம்பரம் அல்லது திருவாரூர், மயிலாடுதுறை பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கர்ப்பிணிகளை அனுப்பி வைக்க வேண்டி உள்ளது. இதனால் மருத்துவத்துறைக்கும், நோயாளிகளின் உறவினர்களுக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.
எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சீர்காழி அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu