மயிலாடுதுறை மாவட்டத்தில் கூடுதலாக நெல் கொள்முதல் செய்ய கோரிக்கை
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் 165000 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் சம்பா, தாளடி சாகுபடி செய்துள்ளனர். மார்கழி மாதத்தின் இறுதியில் தொடங்கிய அறுவடைப் பணிகள் தை மாதத்தில் பெரும்பாலும் நிறைவடைந்தது. விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்ய மாவட்டம் முழுவதும் கடந்த வெள்ளிக்கிழமை 165 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அரசு திறந்துள்ளது. இவற்றில் சில நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஆன்லைனில் ஏற்படும் குறைபாடுகள் காரணமாக செயல்படாமல் உள்ளது.
விவசாயிகள் அறுவடையைத் தொடங்கிய பின்னரே கிராம நிர்வாக அலுவலர் சிட்டா, அடங்கலை கையொப்பம் இட்டு, கொள்முதலுக்கான சான்றொப்பம் வழங்குகின்றனர். அறுவடை முடிந்த பின்னர் ஆன்லைனில் பதிவு செய்தால், குறைந்தது 15நாட்களுக்கு பிறகே விவசாயிகளுக்கு தேதி வழங்கப்படுகிறது. இதனால், விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய ஆன்லைனில் பதிவு செய்து வைத்துவிட்டு, நெல்மூட்டைகளை களம் அல்லது வீட்டில் அடுக்கி வைத்து ஒரு வாரத்துக்கும் மேலாக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
ஒரு ஏக்கருக்கு 60 மூட்டை நெல் மட்டுமே நேரடி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படுகிறது. அதைவிட கூடுதலாக அறுவடை செய்யும் நெல்லை, விற்பனை செய்ய முடியாத நிலையில் உள்ள விவசாயிகள், அவற்றை என்ன செய்வது என்ற கேள்விக்குறியுடன் தவித்து வருகின்றனர்.
ஏக்கருக்கு அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக அறுவடையாகும் நெல்லை கொள்முதல் செய்ய அரசு அனுமதிக்க வேண்டும், அறுவடை தொடங்குவதற்கு முன்னதாகவே, கிராம நிர்வாக அலுவலர் சிட்டா, அடங்கலை வழங்கி சான்றொப்பம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu