அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தள்ளு வண்டி மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு   தள்ளு வண்டி மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்
X

மயிலாடு துறை அருகே எல்.இ.டி. டி.வி. பொருத்தப்பட்ட தள்ளுவண்டியுடன் சென்று பாடம் நடத்துகிறார் ஆசிரியர் சீனிவாசன்.

மயிலாடுதுறையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர் ஒருவர் எல்.இ.டி.டி.வி பொருத்திய தள்ளுவண்டியில் போய் பாடம் நடத்துகிறார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நிம்மேலி -நெப்பத்தூர் ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் சீனிவாசன்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் செயல்படாமல் உள்ள நிலையில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. கிராமப்புற மாணவர்களுக்கு அரசின் கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டாலும் பல வீடுகளில் வறுமையின் காரணமாக தொலைக்காட்சி செயல்படாமல் உள்ளது. பெற்றோர்கள் தின விவசாய கூலி பணிக்கு செல்வதால் கிராமப்புற ஏழை எளிய மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு வருகிறது.

இதனைக் கருத்தில் கொண்ட ஆசிரியர் சீனிவாசன் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி பாதிக்காத வகையில் கடந்த சில மாதங்களாக தனது சொந்த செலவில் நடமாடும் வீல் சேர் மூலம் எல்.இ..டி டி.வி. பொருத்தி மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று மாணவர்களை ஒருங்கிணைத்து பாடங்களை நடத்தி வருகிறார். இதற்காக சீனிவாசன் எல்.இ.டி. டி.வி, ஸ்பீக்கர், இணைய வசதி ஆகியவற்றை தனது சொந்த செலவில் வாங்கிபொருத்தி தள்ளுவண்டி மூலம் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களின் வீடுகளுக்கு சென்று கல்வி கற்பித்து வருகிறார்.

நிம்மேலி நடுத்தெரு, தெற்கு தெரு, வடக்கு தெரு என ஒவ்வொரு பகுதிகளிலும் எல்இடி பொருத்தப்பட்ட வீல் சேரை தள்ளிக் கொண்டு சென்று கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்களை மாணவர்களுக்கு கற்பித்து அதன் மூலம் சந்தேகங்களை தெளிவு படுத்தி வருகிறார்.

மாணவர்களை சமூக இடைவெளியுடன் அமர செய்து, முக கவசம் அணிய வைத்து ஒவ்வொரு பகுதியாக நாள்தோறும் சென்று மாணவர்களுக்கு கல்வியை கற்றுக் கொடுத்து வருகிறார், ஆசிரியரின் இந்த புதிய முயற்சிக்கு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.



Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!