குப்பை கொட்டும் இடமா காவிரி? நகராட்சியை கண்டித்து பொதுமக்கள் மறியல்
காவிரியில் குப்பை கழிவு கொட்டுவதாகக்கூறி, மயிலாடுதுறை நகராட்சியை கண்டித்து மறியலில் ஈடுபட்டவர்கள்.
மயிலாடுதுறை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இங்கு சேகரமாகும் குப்பைகளை, மயிலாடுதுறை அருகே ஆனந்ததாண்டவபுரம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள குப்பைக் கிடங்கில் கொட்டி மறுசுழற்சி செய்வது வழக்கம். இந்த குப்பைக்கிடங்கு முழுவதுமாக நிரம்பி விட்ட காரணத்தால் கடந்த ஓராண்டாக, நகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை அந்தந்த பகுதிகளில் கொட்டி கொளுத்துவதும், புறநகர் பகுதிகளில் கொட்டிவிட்டு செல்வதும் வாடிக்கையாகிவிட்டது.
மயிலாடுதுறை மாப்படுகை அருகே கிட்டப்பா பாலம் காவிரி ஆற்றின் ஓரத்தில், கடந்த ஓராண்டாக நகராட்சி நிர்வாகத்தினர் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இது தொடர்பாக, இப்பகுதி மக்கள் ஏற்கனவே ஒருமுறை சாலைமறியல் போராட்டம் நடத்தி, குப்பைகளை கொட்ட மாட்டோம் என நகராட்சி நிர்வாகத்தினர் உறுதி அளித்திருந்தனர். எனினும், அதன் பின்னரும் தொடர்ந்து குப்பைகளைக் கொட்டி வந்தனர்.
இதுகுறித்து நான்கு நாட்களுக்கு முன்பு நகராட்சி நிர்வாகத்தில் புகார் மனு அளித்தும், குப்பைகள் கொட்டப்படுவது நிறுத்தப்படாததால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரைராஜ் தலைமையில், பல்வேறு அமைப்பினரும் பொதுமக்களும் இணைந்து, இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நகராட்சி ஆணையர் நேரில் வந்து குப்பைகளை கொட்ட மாட்டோம் என எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி அளிக்கும் வரையில் போராட்டம் தொடரும் என, சாலை மறியல் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu