நாகையில் உயிரிழந்த தனியார் கல்லூரி மாணவிக்கு நீதி கேட்டு போராட்டம்
தனியார் கல்லூரி மாணவி இறப்புக்கு நீதி கேட்டு நாகையில் மாணவ மாணவிகள் போராட்டம் நடத்தினர்.
நாகை மாவட்டத்தில் தனியார் கல்லூரியில் சுபாஷினி (18) என்ற மாணவி ( பிசியோதெரபிஸ்ட்) முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் பருவ கட்டணம் செலுத்தாததால், மாணவியை வகுப்பாசிரியர் வகுப்பின் வெளியே நிற்க வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனையடுத்து கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி இறந்த மாணவியின் உறவினர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பொறையாறு பகுதியில் உள்ள டி.பி.எம்.எல் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் இன்று வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய மாணவர் சங்கம் மாவட்ட குழு உறுப்பினர் எஸ். மார்ட்டின் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பல்வேறு வகுப்புகளை சார்ந்த மாணவர்கள் கலந்துகொண்டு உயிரிழந்த மாணவிக்கு நீதி கேட்டு கோஷங்களை எழுப்பினர். மேலும் தனியார் கல்லூரி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் , நாகையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதில் இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu