மயிலாடுதுறை அருகே தனியார் நிறுவனத்தின் 'வீடு வழிக்கல்வி" திட்டம்

மயிலாடுதுறை அருகே தனியார் நிறுவனத்தின் வீடு வழிக்கல்வி திட்டம்
X

வீடு வழி கல்வி திட்டத்தின் கீழ் பாடம் நடத்துகிறார் ஆசிரியை.

மயிலாடுதுறை அருகே தனியார் நிறுவனத்தின் 'வீடு வழிக்கல்வி" திட்டம் மூலம் மாணவர்களுக்கு வீடுகளிலேயே பாடம் நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றின் 3-வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதன் பாதிப்பில் இருந்து மாணவர்களை பாதுகாக்கும் விதமாக பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள காரணத்தால் மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாகவே கல்வி கற்பிக்கப்படுகிறது. இதன்காரணமாக ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கு இடையிலான நல்லுறவு நீடிப்பதற்கான வாய்ப்பு குறைவதைத் தடுக்கவும், மாணவர்களின் கற்றல் இடைவெளியைப் போக்கும் முயற்சியிலும் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலைத் தலைமையாகக் கொண்டு இயங்கும் கலைமகள் கல்வி நிறுவனம் என்ற தனியார் கல்வி நிலையம் இறங்கியுள்ளது.

இக்கல்வி நிலையத்தின்கீழ் செம்பனார்கோவில், திருக்கடையூர், மயிலாடுதுறை பகுதிகளில் 19 பள்ளிகள் இயங்கிவரும் நிலையில், இந்த பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் சுமார் 4000த்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு 'வீடு வழிக்கல்வி" திட்டத்தை அமல்படுத்தியுள்ளனர். இதன்படி அந்தந்தப் பகுதியில் வசிக்கும் மாணவர்களை ஒன்று சேர்த்து அப்பகுதியில் உள்ள மாணவர்களின் வீடுகளிலேயோ அல்லது ஆசிரியர்களின் வீடுகளிலேயோ அமர வைத்து காலை 10 மணி முதல் 12 மணி வரை அவர்களுக்கு பாடம் நடத்தி வருகின்றனர். இந்த திட்டத்தில் தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்கள் மட்டும் என்றில்லாமல் அப்பகுதியில் வசிக்கும் பிற மாணவர்களுக்கும் ஆசிரியர்கள் பாடம் நடத்தி நற்பெயரைப் பெற்று வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் தங்களிடம் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் தனியார் பள்ளி நிர்வாகங்கள் திண்டாடி வரும் நிலையில், இத்திட்டத்தின் மூலம் கல்வி போதிக்கப்படுவதால் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் எந்த சிக்கலும் இல்லை என்று பெருமிதம் தெரிவிக்கின்றனர் பள்ளி நிர்வாகிகள். மேலும், இத்திட்டத்தின் மூலம் ஆன்லைன் கல்வி என்ற பெயரில் செல்போனில் மூழ்கிக் கிடக்கும் மாணவர்களுக்கு மனதளவில் ரிலீஃப் கிடைப்பதாகவும், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 'இல்லம் தேடிக் கல்வி" திட்டம் போல தனியார் பள்ளி மாணவர்களுக்கு 'வீடு வழிக்கல்வி" திட்டம் பயனுள்ளதாக அமையும் என்றும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil