பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வில் மக்கள் கூடியதால் பரபரப்பு
சீர்காழி அருகே பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்ட இடத்தில் விதிமுறைகளை மீறி மக்கள் கூடினர்.
தமிழக அரசு குடும்பஅட்டைதாரர்களுக்கு முழு கரும்பு, மஞ்சள் பையுடன் இருபத்தொரு பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகை வழங்கிட உத்தரவிட்டு தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி சீர்காழி வட்டத்தில் 97 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் உள்ள ரேஷன் கடையில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இந்தக் கடை பிரதான சாலையில் அமைந்துள்ளது. கடையில் போதிய இடவசதி இல்லை எனக் கூறி அருகில் அண்ணா தெருவில் ஒரு வீட்டினை பிடித்து, ரேஷன் கடை ஊழியர்கள் அங்கு அமர்ந்து பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டனர்.
பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கிடும் முனைப்பில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் ஒரே நேரத்தில் அந்த வீட்டில் குவிந்தனர். வீட்டிற்கு சென்று பொருட்களை வாங்கி , வெளியே வர ஒரே வழி என்பதால் அந்த குறுகிய வழியில், குறுகிய இடத்தில் பொது மக்கள் முக கவசம், சமூக இடைவெளி போன்ற கொரோனா நெறிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு பரிசுத் தொகுப்பு பெற்று செல்ல முனைப்பு காட்டினர் .இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது .அருகில் குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியில் திடீரென பொதுமக்கள் அரசின் கட்டுப்பாடுகளை மீறி பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க ஒன்று கூடியதால் அந்த பகுதியில் போக்குவரத்தும் பாதிப்பு ஏற்பட்டது.
பரிசு தொகுப்பு வாங்க வந்த மக்களில் பெரும்பாலானோர் முக கவசம் அணியாமல் வரிசையில் நின்றனர். முக கவசம் அணிந்து பொருட்கள் வாங்க வேண்டும் என ஊழியர்களும் அறிவுறுத்தவில்லை. இதுகுறித்து தகவலறிந்த சீர்காழி நகராட்சி நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று கூட்டத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர் .இருந்த போதும் பொதுமக்கள் யாரும் அதைக் கண்டுகொள்ளாமல் பரிசுத் தொகுப்பு வாங்கி சென்று விட வேண்டும் என்ற முனைப்பில் ஆர்வமாக இருந்ததால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. ரேசன் கடையில் குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு பெற வருபவர்களுக்கு டோக்கன் முறையில் தேதி குறிப்பிட்டு சமூக இடைவெளியுடன் நெறிமுறைகளை பின்பற்றி பெற்றுச் செல்ல அதிகாரிகளுக்கு அரசு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu