பெருஞ்சேரி வாகீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக திருப்பணிகள் தொடக்கம்
வாகீஸ்வரர் ஆலய திருப்பணி வேலைகளை தருமபுரம் ஆதீனம் தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்துள்ளது பெருஞ்சேரி. இங்கு தத்தசோழன் காலத்தில் கட்டப்பட்ட 1000 ஆண்டுகள் பழைமையான சுவாதந்தர நாயகி உடனாகிய வாகீஸ்வரர் ஆலய பாலாலயம் மற்றும் திருப்பணி தொடக்கம் நடைபெற்றது.
மயிலாடுதுறையில் உள்ள மயூரநாதரை வியாழன் வழிபட்டு தேவர்களுக்கெல்லாம் தலைவராக வரம் கேட்டார். வியாழனை, மாயூரநாதர் பெருஞ்சேரி கிராமம் சென்று. ஈசனை பிரதிஷ்டை செய்து வணங்கினால் அருள் கிடைக்கும் என்று அருளியதால், பெருஞ்சேரியில் வியாழன் சுவாதந்தர நாயகி உடனாகிய வாகீஸ்வரரை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக ஐதீகம் கொண்டது இத்தலம். மேலும் இக்கோயில் சந்திரன், தாரை, சரஸ்வதி தேவி மற்றும் 48,000 முனிவர்கள் யாகம் செய்து வழிபட்ட தலமாகும்.
இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோவிலில் கடைசியாக 1999-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட நிலையில் இன்று மீண்டும் கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்கியது. தருமபுரம் ஆதினம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் எழுந்தருளி, கிராம மக்கள் ஒத்துழைப்போடு பாலாலயம் செய்து, அடிக்கல் நாட்டி வைத்து கும்பாபிஷேக திருப்பணியை தொடங்கிவைத்தார். இதில் ஆடிட்டர் குரு சம்பத்குமார், மாயூரம் கூட்டுறவு வங்கி தலைவர் செந்தில்நாதன், கோயில் செயல் அலுவலர் கயல்விழி உள்ளிட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu