வைத்தீஸ்வரன் கோவிலில் நாட்டு வெடி தயாரிப்பில் ஈடுபட்ட 4 பேர் கைது

வைத்தீஸ்வரன் கோவிலில் நாட்டு வெடி தயாரிப்பில் ஈடுபட்ட 4 பேர் கைது
X

அனுமதியின்றி நாட்டு வெடிகள் தயாரித்ததாக கைது செய்யப்பட்டவர்கள்

வைத்தீஸ்வரன் கோவிலில் ரயில்வே கேட் அருகே அனுமதி இன்றி நாட்டு வெடி தயாரிப்பில் ஈடுபட்ட 4 பேர் கைது 50 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் ரயில்வே கேட் அருகே பட்டாசு விற்பனைக்கான அனுமதி பெற்ற சிதம்பரத்தார் என்ற பெயரில் தனியார் பட்டாசு கடை இயங்கி வருகிறது.

இந்த கடையில் அனுமதியின்றி தயாரிக்கப்பட்ட நாட்டு வெடிகள் மற்றும் நாட்டு வெடி தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் அதிக அளவில் இருப்பதாக வைத்தீஸ்வரன் கோவில் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் லாமேக் தலைமையில், சீர்காழி காவல் ஆய்வாளர் மணிமாறன், வைத்தீஸ்வரன் கோவில் உதவி காவல் ஆய்வாளர் காயத்ரி, சீர்காழி உதவி காவல் ஆய்வாளர் சீனிவாசன் உள்ளீட்ட போலீசார் இன்று சம்பவ இடத்திற்கு நேரில் சென்று கடையை ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது கடையும் கீழ்த்தளத்தில் அனுமதி இன்றி தயாரிக்கப்பட்ட பயங்கர சத்தத்துடன் வெடிக்கக் கூடிய நாட்டு வெடிகள் மற்றும் பட்டாசுகள் மூட்டை மூட்டையாக இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து கடையின் மேல் தளத்தில் ஆய்வு செய்தபோது நாட்டு வெடிகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் கரித்துகள்கள், இரும்பு பைப்புகள், அமோனியா சல்பர்,வெடிமருந்து உள்ளிட்ட மூலப் பொருட்கள் ஏராளமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் தொடர்ந்து பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

இதில் சுமார் 50 கிலோ எடையுள்ள பயங்கர சத்தத்துடன் வெடிக்கக்கூடிய நாட்டு வெடிகள் மற்றும் நாட்டு வெடிகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருள்கள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதிகளை சேர்ந்த ரமேஷ் குமார் (வயது 42), ஆனந்தன் (வயது 47), பழனிச்சாமி (வயது 40), மயிலாடுதுறை கூறைநாடு பகுதியை சேர்ந்த மகேஷ் குமார் (வயது 42), ஆகிய 4 பேரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது போல் சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் வெடி கடைகளுக்கு மட்டும் அனுமதி பெற்று அனுமதி இன்றிஅதிக சத்தத்துடன் வெடிக்கக்கூடிய நாட்டு வெடிகளை பலர் அனுமதி இன்றி தயாரித்து விற்பனை செய்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags

Next Story
ai marketing future