குத்தாலம் அருகே 2 நாள் குடிநீர் வராததை கண்டித்து மக்கள் சாலை மறியல்

குத்தாலம் அருகே 2 நாள் குடிநீர் வராததை கண்டித்து மக்கள் சாலை மறியல்
X

குத்தாலம் அருகே  கோனேரி ராஜபுரம் கிராமத்தில் காலி குடங்களுடன் மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

குத்தாலம் அருகே 2 நாள் குடிநீர் வராததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம நடத்தினார்கள்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கோனேரிராஜபுரம் ஊராட்சி வைகல் கிராமத்தில் உள்ள வடக்கு தெரு, நடுத்தெரு மற்றும் கீழத்தெரு ஆகிய மூன்று தெருக்களுக்கு வடக்கு தெருவில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அந்த நீர்த்தேக்கத் தொட்டி மிகவும் பழுதடைந்து விட்ட காரணத்தால் அதனை இடிக்க ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து அதே பகுதியில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அண்மையில் கட்டப்பட்டது. ஆனால் தற்போது வரை அதற்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில் பழைய தொட்டியிலும் நீர் நிரப்பப்படாததால், கடந்த இரண்டு நாட்களாக இப்பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ள இடத்தின் அருகில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதே பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு, மின் இணைப்பு வழங்கி குடிநீர் விநியோகத்தை தொடங்கிய பின்னரே பழைய தொட்டியை இடிக்க வேண்டும் என்று அவர்கள் கோஷம் எழுப்பினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பாலையூர் காவல் ஆய்வாளர் விசித்ராமேரி, ஊராட்சி தலைவர் சித்ரா விஜயகுமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் விரைவில் புதிதாக கட்டப்பட்ட நீர்த்தேக்க தொட்டிக்கு மின் இணைப்பு வழங்கி குடிநீர் வினியோகம் செய்வது என்றும் அதுவரை தற்காலிகமாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வது என்றும் உறுதி அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!