மயிலாடுதுறை அருகே நீரில் மூழ்கிய நெற்பயிரை காப்பாற்ற விவசாயிகள் கோரிக்கை

மயிலாடுதுறை அருகே தண்ணீரில் மூழ்கிய நெய்பயிருடன் விவசாயிகள் உள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தினமும் மழை பெய்து வருகிறது. இதனால், மயிலாடுதுறை அருகே பாண்டூர், பொன்னூர், மகாராஜபுரம், அருள்மொழிதேவன், கொற்கை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் நடவு செய்துள்ள 15 நாள் சம்பா பயிர்கள் முற்றிலுமாக நீரில் மூழ்கியுள்ளது.
திருமங்கலத்திலிருந்து கங்கணம்புத்தூர் வரை சுமார் ஐந்து கிலோ மீட்டர் செல்லும் எல்லை வாய்க்கால் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் ஆண்டுதோறும் பெருமழைக்காலங்களில் கடும் பாதிப்புக்கு உள்ளாகிவரும் இப்பகுதி விவசாயிகள் சிலர் இந்த ஆண்டு ஒன்றிணைந்து தாங்களே ரூ.1 லட்சம் வரை செலவுசெய்து தங்கள் பகுதியில் எல்லை வாய்க்காலை தூர்வாரி உள்ளனர். இருப்பினும், பல்வேறு கிராமங்களில் தூர்வாரப்படாத நிலையில், அண்மையில் பெய்த கனமழையால் தண்ணீர் தேங்கி பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் உடனடியாக எல்லை வாய்க்காலை தூர்வாரி அழுகத் தொடங்கியுள்ள தங்கள் பயிர்களை காப்பாற்றி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இன்னும் ஓரிரு நாட்கள் தாமதித்தாலும் தங்கள் பயிர்களை சிறிதளவுகூட காப்பாற்ற முடியாமல் போய்விடும் என்றும் அரசு இதனை கவனத்தில் கொண்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu