ஓ.என்.ஜி.சி. குழாய்களை அப்புறப்படுத்தக்கோரி முற்றுகை போராட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருவிளையாட்டம் கிராமத்தில் பாண்டியன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராட்சத குழாய்களை இறக்கி சேமிப்புக் கிடங்கை அமைத்துள்ளனர்.
டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதுபோன்று ராட்சத குழாய்களை இறக்கி இருப்பதைக் கண்டு அப்பகுதி கிராமமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனிடையே திருவிளையாட்டம் பகுதியில் அமைந்துள்ள ராட்சத குழாய் சேமிப்புக் கிடங்கை உடனடியாக அகற்ற கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் அமைத்துள்ள சேமிப்புக் கிடங்கை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்ளிட்ட கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ராட்சத குழாய்களை உடனடியாக அப்புறப்படுத்த கோரி சேமிப்பு கிடங்கு முன்பு கோஷங்கள் எழுப்பினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பூர் காவல்துறையினர் மற்றும் தரங்கம்பாடி வட்டாட்சியர் புனிதா போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு வார காலத்திற்குள் அனைத்து ராட்சத குழாய்களும் அகற்றப்படும் என உறுதி அளித்ததன் பேரில் தற்காலிகமாக போராட்டத்தை விலக்கிக் கொண்டனர். ஒரு வாரத்துக்குள் அகற்றாவிட்டால் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu