மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் மழைநீர் தேங்கி நிற்கும் அவலம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில்  மழைநீர்  தேங்கி நிற்கும் அவலம்
X

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்  செல்லும் சாலையில் தேங்கியுள்ள மழைநீர்

சாலையை சீரமைத்து மழை நீர் வடிய வழிவகை செய்யுமாறு வெள்ளை அட்டையில் எழுதி சுவற்றில் ஒட்டியுள்ளனர்

மயிலாடுதுறையில் ஒரு நாள் பெய்த மழையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் ஒரு வாரத்துக்குமேல் தண்ணீர் தேங்கி நிற்பதற்கு காரணமான நகராட்சிக்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்தனர்.

மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட 32, 35-வது வார்டுகளில் 1 முதல் 5 புதுத்தெக்கள் உள்ளன. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். புதுத்தெருவையும் தேரோடும் வீதிகளையும் இணைக்கும் சாலை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தரமற்ற முறையில் போடபட்டதால் குண்டும்குழியுமாக உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில், இந்த இணைப்பு சாலை பகுதியில் உள்ள வணிகவரி அலுவலக கட்டிடத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது.

ஆட்சியர் அலுவலகம் வந்ததால் போக்குவரத்து அதிகரித்தது. தேரோடும் கீழவீதி சாலையை பெயர்த்துவிட்டு போடாமல் சாலையில் மேலேயே கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு புதிதாக தார்சாலை அமைக்கப்பட்டது. அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ள இணைப்பு சாலையில் பாதிவரை தார்சாலை போடப்பட்டது. எஞ்சிய 300 அடி நீளமுள்ள சாலை தற்போதுவரை குண்டும் குழியுமாக உள்ளது. புதுத்தெருக்கள் இணையும் பஜனைமடம் மற்றும் காளியம்மன்கோவில் ஆகிய இரு இடங்களில் மழைநீர் வடிய வழியின்றி தினந்தோறும் மழைபெய்தது போல் சாலையில் தண்ணீர் தேங்கி உள்ளது.

இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைத்து மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தரக்கோரி மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணைர் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் சாலையை சீரமைத்து மழை நீர் வடிய வழிவகை செய்யுமாறு வெள்ளை அட்டையில் எழுதி சுவற்றில் ஒட்டியுள்ளனர். வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளதால் போர்கால அடிப்படையில், பாதியில் கைவிடப்பட்ட குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைத்து மழைநீர் சாலைகளில் தேங்காமல் இருப்பதற்கு மழைநீர் வடிகால் அமைத்துதர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags

Next Story