மயிலாடுதுறை அருகே சிறுமிக்கு இறந்து பிறந்த குழந்தை மண்ணில் புதைப்பு

மயிலாடுதுறை அருகே சிறுமிக்கு இறந்து பிறந்த குழந்தை மண்ணில் புதைப்பு
X

கோப்பு படம் 

மயிலாடுதுறை அருகே சிறுமிக்கு இறந்து பிறந்த குழந்தை மண்ணில் புதைக்கப்பட்டது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் காவல் சரகத்துக்கு உள்பட்ட ஒரு கிராமத்தில் கடந்த 2-ஆம் தேதி ஒருவரது வீட்டின் பின்புறம் மண்ணில் புதைந்த நிலையில் பச்சிளம் ஆண் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அந்த குழந்தையின் உடலை கைப்பற்றிய செம்பனார்கோவில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில், அப்பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்ததும், அதனை அந்த சிறுமியே மண்ணில் புதைத்ததும் தெரியவந்தது. மேலும் விசாரணையில் சிறுமி திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் கிராமத்தில் உறவினர் வீட்டில் தங்கியிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த அபிமன்யு என்ற இளைஞருடன் அறிமுகம் ஏற்பட்டு பழகி வந்ததும், அவர் சிறுமியிடம் ஆசை வார்த்தைகூறி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதில் சிறுமி கர்ப்பம் அடைந்து, இறந்த நிலையில் குழந்தை பிறந்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சங்கீதா மற்றும் போலீஸார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அபிமன்யுவை தேடி வருகின்றனர்.

இளைஞர் அபிமன்யுவிடம் பழகி கர்ப்பமடைந்ததில், சிறுமிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் அவரை மருத்துவமனையில் காண்பித்தபோது, மருத்துவர் ஸ்கேன் எடுத்துவர பரிந்துரைத்துள்ளார். ஆனால், சிறுமியின் பெற்றோர் பின்னர் கண்டுகொள்ளாமல் விட்ட நிலையில், சிறுமிக்கு அண்மையில் குழந்தை இறந்து பிறந்ததும், அதனை அவர் யாருக்கும் தெரியாமல் மண்ணில் குழி தோண்டி புதைத்ததும் தற்போது அம்பலமாகியுள்ளது.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare