மயிலாடுதுறை அருகே தரிசு நிலத்தை பசுமை காடாக மாற்றிய இயற்கை ஆர்வலர்

மயிலாடுதுறை அருகே தரிசு நிலத்தை பசுமை காடாக மாற்றிய  இயற்கை ஆர்வலர்
X

மயிலாடுதுறை அருகே வீரா சலாவுதீன் உருவாக்கிய பசுமை காடு.

மயிலாடுதுறை அருகே தரிசு நிலத்தை பசுமை காடாக மாற்றிய இயற்கை ஆர்வலர் வேலையில்லா இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்.

மனை வணிகம் என்ற பெயரில் விளைநிலங்களை விலைக்கு வாங்கி அதனை தரிசாக்கி, வீட்டுமனையை உருவாக்கி வரும் இந்த காலகட்டத்தில் மயிலாடுதுறையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தரிசு நிலங்களை வாங்கி அதனை பசுமைக்காடாக மாற்றி இருப்பது அனைவரின் வரவேற்பை பெற்றுள்ளது.

மயிலாடுதுறை அருகே உள்ள நீடூரைச் சேர்ந்தவர் வீரா சலாவுதீன். தாய்லாந்து நாட்டில் பாங்காக் நகரில் 40 வருடங்களாக நவரத்தின தொழில் செய்து வருகிறார். இயற்கை ஆர்வலரான இவர் வெளிநாட்டில் தனது தொழிலில் நல்ல வருமானம் உள்ள போதிலும், சொந்த நாட்டில் மரங்கள் வளர்ப்பில் ஆர்வம் கொண்டுள்ளார். இதற்காக நீடூர், கங்கணம்புத்தூர் ஊராட்சிகளில் தனக்கு சொந்தமான சுமார் 70 ஏக்கர் தரிசு நிலத்தை பசுமையாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

அது நல்ல பலனளிக்கவே, பாண்டூர் கிராமத்தில் 32 ஏக்கர் தரிசு நிலத்தை விலைக்கு வாங்கி அங்கும் மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளார். மொத்தமாக சுமார் 100 ஏக்கர் நிலத்தில் சுமார் 5000 தேக்கு, 5000 மகாகனி, 3000 மலைவேம்பு, 3000 ரோஸ்வுட், 500 வேங்கை, 100 செம்மரம் மற்றும் சிசு, சந்தனம், நாவல், சவுக்கு, முருங்கை உள்ளிட்ட பல்வேறு வகை மரக்கன்றுகளை நட்டுள்ளார்.

மழைக்காலங்களில் பெருவெள்ளம் சூழ்ந்து நிற்கும் நிலத்தை இவர் விலைக்கு வாங்கியபோது தொடக்கத்தில் பலர் இவரை ஏளனம் செய்துள்ளனர். ஆனால் இவரோ மாற்றி யோசித்துள்ளார். உதாரணத்துக்கு, ஒரு ஏக்கரான 300 குழி நிலத்தில் சுமார் 100 குழி அளவுக்கு பள்ளம் தோண்டி, அந்த பள்ளத்தில் உள்ள மண்ணை எடுத்து மீதமுள்ள நிலத்தில் பரப்பி அதனை மேடாக்கியுள்ளார். மேடுபடுத்தப்பட்ட நிலத்தில் மரக்கன்றுகளை பயிரிட்டுள்ள இவர், பள்ளமாக்கிய இடத்தில் குட்டைகளை ஏற்படுத்தியுள்ளார். குட்டையில் நிரப்பப்படும் நீர் மரங்களின் உயிர்நீராக மாறும் நிலையில், அக்குட்டையில் மீன்களை வளர்த்து உடனடி லாபமும் கண்டுவருகிறார். மேலும், இவர் தனது பண்ணையில் வளர்த்துள்ள கீரை, வாழை, ஊடுபயிர்களான பயறு, உளுந்து மற்றும் தோட்டப்பயிர்களும் உடனடி லாபத்தை வழங்கி வருகிறது.

சொந்தமாக குறைந்தது 5 ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்கள் அரசாங்க வேலையை எதிர்பார்த்து காத்திருக்காமல் மரம் வளர்ப்பில் ஈடுபட்டால் நல்ல லாபம் அடையலாம் என்று தெரிவிக்கும் இவர் தொழில் முனைவோருக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார். வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் என்று அரசாங்கம் அறிவுறுத்தி வரும் நிலையில், ஊருக்கே தேவையான மரங்களை தனது பசுமைக்காட்டில் வளர்த்து அசத்தி வரும் இந்த பசுமைக் காவலரை கிராமமக்கள் பாராட்டி வருகின்றனர்.

Tags

Next Story
வாழ்க்கையே வெறுத்துப்போய் நிற்கிறதா? ஒரு நிமிடம் இதை படிங்க..!