மயிலாடுதுறை: கோனேரிராஜபுரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா
கோனேரி ராஜபுரம் நடராஜபெருமானுக்கு தீபாராதனை நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கோனேரிராஜபுரத்தில் திருநாகேஸ்வரம் ராகுபகவான் சுவாமி கோயிலின் உபகோயிலான தேகசௌந்தரி அம்பாள் உடனுறை உமாமகேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஆனந்தக் கூத்தராகிய ஸ்ரீநடராஜப் பெருமான் உலகில் மிகப் பெரிய வடிவமாக எட்டரை அடி உயரம் கொண்டு, காண்போரை சுண்டி இழுக்கும் நர்த்தன சுந்தர நடராஜராக விளங்குகிறார்.
இக்கோயிலில் கடந்த 17-ஆம் தேதி திருவாதிரை திருவிழா தொடங்கியது. கோவிலில் தினமும் சிறப்பு அபிஷேகம், சதுர்வேத பாராயணம், திருவெம்பாவை பாராயணம், நீராஞ்சன தீபாராதனை ஆகியவை நடைபெற்று திருவாதிரை திருநாளை முன்னிட்டு இன்று அதிகாலை ஆருத்ரா தரிசனம் விமரிசையாக தொடங்கி நடைபெற்றது. இதைமுன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு சன்னதி திறக்கப்பட்டு அருள்மிகு தேகசௌந்தரி அம்பாள் உடனுறை நடராஜ பெருமானுக்கு பால், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், சர்க்கரை, தேன், பழவகைகள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் திராட்சை மாலை, நகைகள், உத்திராட்சமாலை, வண்ணமலர் மாலைகள், புலித்தோல் பட்டாடை அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சுவாமிக்கு யாகசாலையில் இருந்து ரட்சை பெறப்பட்டு வைக்கப்பட்டு சோடஷ உபச்சாரம் நடைபெற்றது. மேளதாளம் முழங்க மகாதீபாராதனையும், ஆருத்ரா தரிசனமும் நடைபெற்றது. பூஜைகளை சதாசிவ குருக்கள் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் செய்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu