சர்வதேச நீச்சல் போட்டியில் தங்கம் வென்ற மயிலாடுதுறை இளைஞர்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த எரவாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆல்ரின் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த வாரம் நேபாளில் நடைபெற்ற சர்வதேச அளவில் நடைபெற்ற பின்னோக்கி செல்லும் நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்த ஆல்ரின் ஆம்ஸ்ட்ராங் 29.01.2021 முதல் 31.01.2021 வரை கோவாவில் தேசிய அளவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்று சர்வதேச போட்டிக்கு தகுதி பெற்றார். இந்நிலையில் நேபாள் பொக்ராவில் 15.03.2021 முதல் 19.03.2021 வரை நடைபெற்ற சர்வதேச போட்டிகளில் ஒன்றான பின்னோக்கி செல்லும் நீச்சல் போட்டியில் 100 மீட்டர் பந்தயத்தில் பங்கேற்று 1 நிமிடம் 09.36 நொடிகளில் கடந்து முதலிடத்தைப் பிடித்து தங்கப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
வெற்றி பெற்று மயிலாடுதுறை திரும்பிய வீரருக்கு மயிலாடுதுறை ரயில்வே நிலையத்தில் கிராமமக்கள் சார்பில் மயிலாடுதுறை வழக்கறிஞர் ஷங்கமித்திரன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய ஆல்ரின் ஆம்ஸ்ட்ராங் கூறுகையில் சிறுவயது முதல் நீச்சல், போட்டியில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக ஏரவாஞ்சேரி கிராமத்தில் உள்ள ஊர் பொதுக்குளத்தை சுத்தம் செய்து, அங்கு நீச்சல் பயிற்சி பெற்று வந்ததாகவும், பயிற்சியாளர் இல்லாமல் தனியாக தன்னம்பிக்கையுடன் நீச்சல் பயிற்சி செய்து சர்வதேச அளவிலான போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றது மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறிய அவர் கிராமப்புறங்களில் வசிக்கும் இளைஞர்கள் விளையாட்டுத் துறையில் ஊக்குவிக்கவும், முறையான பயிற்சி அளிக்கவும் அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu