மயிலாடுதுறை கண்ணாரத்தெரு திருவாரூர் பிரதான சாலையில் திடீர் பள்ளம்
மயிலாடுதுறையில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் கடந்த 2007ம் ஆண்டுமுதல் பாதாளசாக்கடை திட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது. பாதாளசாக்கடை பராமரிப்பு பணிகளை நகராட்சி நிர்வாகம் தனியாரிடம் ஒப்பந்த அடிப்படையில் வழங்கி பராமரித்து வருகிறது. தரமற்ற முறையில் பாதாளசாக்கடை திட்டம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 10 ஆயிரம் இணைப்புகள் உள்ள இத்திட்டத்தில் அளவுக்கதிகமாக இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக பாதாளசாக்கடை குழாய் உடைந்து கழிவுநீரால் மண் அரிப்பு ஏற்பட்டு சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டு வருகிறது. கச்சேரிரோடு, கண்ணாரத்தெரு, நகராட்சி அலுவலகம் எதிரே, தரங்கம்பாடி சாலை தைக்கால்தெரு, கொத்தத்தெரு, சுமைதாங்கி, திருவாரூர் சாலை என்று 15க்கும் மேற்பட்ட இடங்களில் சாலைகள் திடீரென்று உள்வாங்கி பெரிய பள்ளம் ஏற்பட்டு சரிசெய்யப்பட்டு வருவது தொடர்கதையாக உள்ளது.
பாதாளசாக்கடை பிரச்சனையால் 36 வார்டுகளிலும் கழிவுநீர் பல்வேறு சாலைகளில் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் தொற்றுநோய் ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில் மயிலாடுதுறை கண்ணாரத்தெருவில் திருவாரூர் செல்லும் பிரதான சாலையில் பாதாளசாக்கடை குழாய் உடைப்பால் சாலை உள்வாங்கி 10 அடி அகலத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த நகராட்சி ஆணையர் பாலு, பொறியாளர் சனல்குமார், டிஎஸ்பி வசந்தராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.
காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையில் போலீசார் சாலையில் பள்ளம் ஏற்பட்ட இடத்தை சுற்றிலும் பேரிகார்டு அமைத்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அதே பகுதியில் உள்ள ரேஷன்கடை எதிரே பள்ளம் ஏற்பட்டு மண்ணை கொட்டி சரிசெய்துள்ளனர். மயிலாடுதுறை நகரில் 2 ஆண்டுகளாக சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வரும் பாதாளசாக்கடையை மறுசீரமைப்பு செய்துதர தமிழக அரசு தற்போதைய பிரதான கோரிக்கையாக உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu