மயிலாடுதுறை: மழையை பொருட்படுத்தாமல் ஜனநாயக கடமையாற்றும் வாக்காளர்கள்

மயிலாடுதுறை: மழையை பொருட்படுத்தாமல் ஜனநாயக கடமையாற்றும் வாக்காளர்கள்
X

வாக்குச்சாவடி ஒன்றில் வாக்காளரின் பெயர் சரிபார்ப்பு நடைபெற்றது. 

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 நகராட்சி, 4 பேரூராட்சிகளில், மழைக்கு மத்தியில் வாக்குப்பதிவு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தின் 38-வது மாவட்டமாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டம் சந்திக்கும் முதல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இது. இத்தேர்தலில் 72,846 ஆண்கள், 77,077 பெண்கள் மற்றும் 15 இதரர் என மொத்தம் 1,49,938 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மாவட்டம் முழுவதும் 596 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய 2 நகராட்சிகள், மணல்மேடு, குத்தாலம், தரங்கம்பாடி, வைத்தீஸ்வரன்கோயில் ஆகிய 4 பேரூராட்சிகள் உள்ளன. இன்று நடைபெறும் வாக்குப் பதிவிற்காக மாவட்டம் முழுவதும் 177 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 51 மையங்கள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டு, சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 20 சதவீத வாக்குப்பதிவு இயந்திரங்கள் கையிருப்பில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் 854 அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் தலைமையில் 1 ஏடிஎஸ்பி, 3 டிஎஸ்பிக்கள், 17 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட மொத்தம் 740 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காலையில் சாரல் மழை பெய்தாலும் பொதுமக்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றும் வகையில் வாக்களித்து வருகின்றனர்.

Tags

Next Story