மயிலாடுதுறை நகராட்சி தலைவர் பதவியை தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்க கோரி மனு

மயிலாடுதுறை நகராட்சி தலைவர் பதவியை தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்க கோரி மனு
X

மயிலாடுதுறை நகராட்சி தலைவர் பதவியை எஸ்.சி.க்கு ஒதுக்க கோரி மனு கொடுக்கப்பட்டது.

மயிலாடுதுறை நகராட்சி தலைவர் பதவியை தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மயிலாடுதுறை நகராட்சி தலைவர் பதவியை தாழ்த்தப்பட்டோர் அல்லது பழங்குடியினருக்கு ஒதுக்கீடு செய்ய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து, அக்கட்சியின் ஒன்றிய அமைப்பாளர் மோகன்குமார் மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மயிலாடுதுறை நகராட்சி துவங்கப்பட்டு 100 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், இதுநாள்வரை நகராட்சி தலைவர் பதவி தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளது. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர்களைவிட குறைவான எண்ணிக்கையில் உள்ள சாதியினர் தலைவராகும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. மேலும், மொத்தமுள்ள 36 வார்டுகளில் 2 வார்டுகள் மட்டுமே தனி வார்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இடஒதுக்கீடு அடிப்படையில்; 7 வார்டுகளை ஒதுக்கீடு வேண்டும். ஆனால், அவர்கள் வசிக்கின்ற வார்டுகளை பல்வேறு கோணங்களில் பிரித்தோ அல்லது சேர்த்தோ பிரதிநிதித்துவம் வழங்காமல் இதுவரை உள்நோக்கத்தோடு வார்டு மறுவரையறை செய்யப்பட்டுள்ளது.

எனவே, வார்டு 3, 35 ஆகியவற்றை தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கான வார்டாக ஒதுக்கீடு செய்தும், மயிலாடுதுறை நகராட்சி தலைவர் பதவியை வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தாழ்த்தப்பட்டோர் அல்லது பழங்குடியினருக்கு ஒதுக்கீடு செய்தும் அறிவிப்பு செய்து, அதன்பிறகே மயிலாடுதுறை நகராட்சி தேர்தலை நடத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த மனுவின் நகலை மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் மற்றும் தமிழக தேர்தல் ஆணையருக்கும் அவர் அனுப்பியுள்ளார். அப்போது, வி.சி.க. மண்டல செயலாளர் வேலு.குபேந்திரன், தலித் விடுதலைக்கான மாற்று முன்னணி மாநில தலைவர் ராஜீவ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
ai healthcare products