சமையல் பாத்திரங்களுடன் மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பெண்கள்

சமையல் பாத்திரங்களுடன் மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பெண்கள்
X

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு பெண்கள் சமையல் பாத்திரங்களுடன் வந்தனர்.

சமையல் பாத்திரங்களுடன் மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் மீனவர் காலனியை சேர்ந்த பார்த்திபன், சிவதாஸ், சந்திரன், சுகுந்தன், பிரபாகரன் உள்ளிட்ட 9 குடும்பங்களை சேர்ந்த மீனவர்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில், பூம்புகார் மீனவர் கிராமத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 8-ஆம் தேதி மீனவர்களிடையே ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக இருதரப்பினரும் பூம்புகார் போலீசில் புகார் செய்திருந்தனர். இதில் எதிர்தரப்பை சேர்ந்த தமிழ்வாணன் என்பவர் இறந்ததால் அவ்வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டிருந்தது. ஆனால் பிரச்சினை நடந்து 18 நாட்களுக்கு பிறகு தமிழ்வாணன் கொரோனா தொற்றால் இறந்துள்ளார். ஆனால் எங்களை பழிவாங்கும் நோக்குடன் கொலை வழக்கு போடப்பட்டதால் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்துள்ளோம். இந்நிலையில் பூம்புகார் மீனவ பஞ்சாயத்தார் எங்கள் குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். மீனவ கிராமத்தில் உள்ள நபர்கள் யாரும் எங்களிடம் பேசக்கூடாது, ரூ.40 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். இல்லை என்றால் எங்களை ஊரைவிட்டு விரட்டி விடுவோம் என்று மிரட்டி வருகின்றனர்.

இதுகுறித்து மயிலாடுதுறை எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தும் இதுநாள்வரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் பிள்ளைகளின் படிப்பு வீணாவதோடு எங்களின் வாழ்வாதாரம் பாதித்து சாப்பாட்டிற்கே வழியின்றி தவித்து வருகிறோம். சட்டவிரோதமாக ஊர்விலக்கல் செய்துள்ளதை நீக்கி தாங்கள் மீன்பிடி தொழிலுக்கு செல்ல ஆவண செய்ய வேண்டுமென்று சமையல் அடுப்பு பாத்திரங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறப் போவதாக வந்தனர். அவர்களிடம் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் பேச்சுவார்த்தை நடத்தி மனுக்களை பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பி வைத்தார்.

Tags

Next Story