திருமணஞ்சேரி உத்வாகநாதர் சுவாமி கோயிலில் மாசி மக பெருவிழா இன்று கொடியேற்றம்
கொடியேற்றம்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருமணஞ்சேரியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பிரசித்தி பெற்ற உத்வாகநாதர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. சிவபெருமான் கல்யாணசுந்தர மூர்த்தியாக எழுந்தருளி கோகிலாம்பாள் அம்பிகையை திருமணம் செய்துகொண்டதால் இத்தலம் திருமணஞ்சேரி என அழைக்கப்படுகிறது. அப்பர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் பாடல் பெற்ற இக்கோயிலில் கடந்த 200 ஆண்டுகளுக்கு மேலாக மாசி மக பெருவிழா கொண்டாடப்படாமல் இருந்தது. இந்நிலையே கோயில் நிர்வாகத்தின் தொடர்முயற்சியின் காரணமாக, இந்த ஆண்டு கோயிலில் மீண்டும் மாசி மகப் பெருவிழா தொடங்கியுள்ளது.
இதை முன்னிட்டு, நேற்று அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜை, கல்யாண மாரியம்மன் கிராம தேவதை உற்சவம் ஆகியன நடைபெற்றது. இன்று காலை விநாயகர் புறப்பாடு செய்யப்பட்டு துவஜாரோகணம் என சொல்லப்படும் கொடியேற்றம் விமரிசையாக நடைபெற்றது. இதை முன்னிட்டு கோயில் கொடிமரத்துக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு ரிஷபக் கொடி ஏற்றப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் அஸ்திர தேவருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு பல்லக்கில் புறப்பாடு நடைபெற்றது. பூஜைகளை உமாபதி சிவாச்சாரியார் குழுவினர்கள் நடத்தினர். இதில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மாரிமுத்து, ஆய்வாளர் ஹரிசங்கரன், செயல் அலுவலர் நிர்மலாதேவி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
மாசி மக பெருவிழாவில், தினசரி காலை மாலை வேலைகளில் சுவாமி வீதி உலாவும், முக்கிய உற்சவமாக வருகிற 12-ம் தேதி சகோபுர தரிசனம், 16-ஆம் தேதி திருத்தேரோட்டம், 17-ஆம் தேதி தீர்த்தவாரி ஆகிய உற்சவங்கள் நடத்தப்பட்டு உற்சமானது 18-ஆம் தேதி நிறைவடைகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu