மயிலாடுதுறை கோவில்களில் நடக்கவிருந்த 100க்கும் மேற்பட்ட திருமணங்கள் ரத்து
வெறிச்சோடிய கோவில்கள்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாரத்தில் கடைசி 3 நாட்கள் கோயில்களுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் மயிலாடுதுறை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான கோவில்கள் மூடப்பட்டன. திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் நடைபெறவிருந்த 148க்கும் மேற்பட்ட திருமணங்கள் ரத்து செய்யப்பட்டன.
தமிழக அரசு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாரத்தில் கடைசி 3 நாட்கள் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் கோவில்களுக்கு பக்தர்கள் செல்ல தடைவிதித்துள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி கோவிலில் நித்திய பூஜைகள் மட்டுமே நடைபெறுகின்றன. பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.
அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கணக்கான கோவில்கள் வெறிச்சோடி காணப்பட்டது. தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் உலகப்புகழ்வாய்ந்த தேவாரப்பாடல் பெற்ற அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் ஆலயம் உள்ளது. சிவபெருமான் மார்க்கண்டேயனுக்காக எமனை சம்ஹாரம் செய்த இத்தளத்தில் ஆயுள் விருத்தி வேண்டி 60 வயதிலிருந்து 90, 100 வயது பூர்த்தி அடைந்தவர்களுக்கு நடைபெறும் சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் கனகாபிஷேகம், பூர்ணா அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு திருமணங்கள் மற்றும் ஆயுள் ஹோமங்கள் ரத்து செய்யப்பட்டன.
தமிழக மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகைபுரிந்து தினந்தோறும் நடைபெறும் திருமணங்களில் வெள்ளிக்கிழமையான இன்றும், சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் நடைபெறும் 148க்கும் மேற்பட்ட திருமணங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் கோயில் பக்தர்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடியது. இதே போல் மயிலாடுதுறை மாயூரநாதர் கோவில், பரிமளரெங்கநாதர் ஆலயம், திருமணஞ்சேரி கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில், உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள பெரிய கோவில்கள் முதல் சிறிய கோவில்கள் வரை மூடப்பட்டு பக்தர்கள் இன்றி நித்தியபூஜை மட்டும் நடைபெறுவதால் கோவில்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu