தமிழறிஞர் சீகன்பால்குவிற்கு மணிமண்டபம்: எம்எல்ஏ நிவேதா முருகனுக்கு பாராட்டு
தமிழறிஞர் சீகன்பால்குவிற்கு மணிமண்டபம் கட்ட சட்டசபையில் கோரிக்கை வைத்த எம்எல்ஏ நிவேதா முருகனுக்கு பாராட்டு தெரிவித்த தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையினர்
தமிழ் அறிஞர் சீகன்பால்குவிற்கு மணிமண்டபம் கட்ட சட்டசபையில் கோரிக்கை வைத்த எம்எல்ஏ நிவேதா முருகனுக்கு, தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை சார்பில் பாராட்டு.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் இந்தியாவின் அச்சக தந்தை என்று போற்றப்படும் சீகன் பால்குவுக்கு, மணிமண்டபம் கட்ட சட்டசபையில் கோரிக்கை வைத்த பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகனுக்கு, தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் சார்பில் பாராட்டி நன்றி தெரிவிக்கப்பட்டது.
ஜெர்மனியை சேர்ந்த பாத்லோமேயு சீகன்பால்கு 10.7.1682 அன்று ஜெர்மனியில் சாக்சோனி மாநிலத்தில் உள்ள புல்நிட்ஸ் என்ற ஊரில் பிறந்தார். டென்மார்க் அரசர் 4ம் பிரட்ரிக்கால் சமய பணி செய்ய அனுப்பப்பட்டு 11.11.1705 அன்று தன் நண்பர் ஹென்ரிக்புளுசோவுடன் கோபன்ஹேகனில் இருந்து கப்பலில் இந்தியா புறப்பட்டார். 222 நாட்கள் கப்பல் பயணத்திற்கு பின் 9.7.1706 அன்று நாகை மாவட்டம் தரங்கம்பாடி வந்தார்.
அவர். தரங்கம்பாடி வந்ததன் நினைவாக நினைவு சின்னம் ஒன்று கடற்கரையையொட்டி அமைக்கபட்டுள்ளது. தரங்கம்பாடி வந்த சீகன்பால்கு தமிழ்மொழியின் மீது ஆர்வம் கொண்டு 8 மாதங்களில் எழுதவும், படிக்கவும் கற்று கொண்டார். அதை தொடர்ந்து தமிழில் அச்சு எழுத்துக்களை வடிவமைத்து அச்சு கலையில் தமிழை கொண்டு வர பெரும் முயற்சி மேற்கொண்டு தரங்கம்பாடியில் தமிழில் அச்சு கூடத்தை 24.10.1712 அன்று அமைத்தார்.
1714-ம் ஆண்டு இந்தியாவிலேயே முதன் முதலாக பொறையாரில் ஒரு காகிதம் தயாரிக்கும் தொழிற்சாலையையும், அச்சு மை தயாரிக்கும் தொழிற்சாலையும், பித்தளை, ஈயம் போன்ற உலோகங்களின் தமிழ் எழுத்துகளை உருவாக்கும் ஒரு எழுத்து தயாரிக்கும் கூடத்தையும் ஏற்படுத்தினார். சீகன்பால்கு தமிழ் இலக்கணம், கொடுந்தமிழ் அகராதி, செந்தமிழ் அகராதி இந்து சமய கடவுள்களின் வரலாறு உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். ஆதே ஆண்டிலேயே மரியாடாரத்தி என்பவரை திருமணம் செய்து கொண்டு இருவருமாக சேர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக பல்வேறு போராட்டங்களை தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மேற்கொண்டனர்.
தரங்கம்பாடியில் ஆசியாவின் முதல் புராட்டஸ்டண்டு(சீர்திருத்த) தேவாலயமான புதிய எருசலேம் ஆலயத்தை 1718ல் கட்டியவர் ஜெர்மனியில் உள்ள பல்கலைக்கழகத்தில் தமிழ்துறையை நிறுவியதில் பெரும் பங்காற்றியவர். ,பெண்களுக்கான முதல் கல்வி நிலையம்,விதவைகளை ஆசிரியர்களாகக்கொண்டு பள்ளிக்கூடம், தையற்பயிற்சி பள்ளிகளை அமைத்து எளியவர்களின் கல்வி,சமூக முன்னேற்றத்திற்காக அரும்பாடுப்பட்டவர்.
வெறும் 13 ஆண்டுகளே தரங்கம்பாடியில் வாழ்ந்த அவர் 23.2.1919ல் இயற்கை எய்தினார். சர்வ சமய உரையாடல்களை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே நடத்தி மத நல்லிணக்கத்தை பேணிக்காத்தவரின் உடல் அவர் கட்டிய இன்றும் கம்பீரமாய் காட்சிதரும் தரங்கம்பாடி புதிய எருசலேம் ஆலயத்தில் பலி பீடத்தின் முன் அடக்கம் செய்யபட்டுள்ளது. நாள்தோறும் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் அவர் கட்டிய ஆலயத்தையும், அவர் வந்திறங்கிய இடம் உள்ளிட்ட வரலாற்று நினைவு சின்னங்களை பார்வையிட்டு செல்கின்றனர்.
மதத்தை பரப்ப வந்து தனக்கு அளிக்கப்பட்ட பணியை விட தமிழுக்காக உழைத்து அதன் பெருமையை உலகறிய செய்த தமிழறிஞர் சீகன்பால்குவிற்கு அவர் வந்திறங்கிய தரங்கம்பாடி கடற்கரை பகுதியில் நினைவு மணிமண்டபம் கட்டவேண்டும் என்று அன்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம். முருகன் கோரிக்கை வைத்து நீண்ட உரையாற்றினார்.
சட்டமன்ற உறுப்பினரின் உரையை கேட்ட தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் 13 ஆவது பேராயர் டேனியல் ஜெயராஜ் அறிவுறுத்தலின் படி, தரங்கை மறைமாவட்ட தலைவர் சாம்சன் மோசஸ் தலைமையில் செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை, மூத்த சபை குரு நவராஜ் ஆபிரகாம், ஜான்சன் மான்சிங், டி.பி.எம்.எல் கல்லூரி முதல்வர் ஜீன் ஜார்ஜ், ஜான்சன் நினைவு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜான் சைமன், மற்றும் தரங்கம்பாடி, பொறையார், மயிலாடுதுறை, சீர்காழி, மணிக்கிராமம், திருவிளையாட்டம், உளுத்துகுப்பை, ஆக்கூர், நாகப்பட்டினம், காரைக்கால், மேட்டுச்சேரி உள்ளிட்ட பகுதியை சேர்ந்த சபை குருமார்கள், கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம் முருகனை சந்தித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்து சால்வை அணிவித்து நினைவு பரிசையும் வழங்கினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu