மயிலாடுதுறை திருநின்றியூர் லட்சுமி புரீஸ்வரர் சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
திருநின்றியூர் உலக நாயகி அம்பாள் சமேத லட்சுமி புரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா திருநின்றியூர் கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான உலக நாயகி அம்பாள் சமேத லட்சுமி புரீஸ்வரர் சுவாமி கோவில் அமைந்துள்ளது.
தேவாரப்பாடல் பெற்ற மாடக்கோவில் அமைப்பில் உள்ள இத்தலம் ஹஸ்த நட்சத்திரத்திற்குரிய தலமும் ஆகும். இத்தகைய சிறப்பு மிக்க இக்கோவிலின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 20ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு இன்று காலை நான்காம் கால பூஜைகள் முடிவுற்று பூர்ணாஹுதி, மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து 8:30 மணிக்கு கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வலம் வந்து விமான கலசங்களை அடைந்தன. 8:45 மணிக்கு தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் 24 ஆவது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், சூரியனார் கோவில் ஆதீனம் 28வது குருமகா சன்னிதானம் மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் கோவில் அர்ச்சகர் சேதுராம குருக்கள் தலைமையில் வைதீஸ்வரன் கோவில் ரமேஷ் திருக்கடையூர் மகேஷ் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.
தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன கும்பாபிஷேக விழாவில் சிதம்பரம் மௌனகுரு சாமி, தருமபுரம், திருவாவடுதுறை, சூரியனார் கோவில் திருமடங்களின் தம்பிரான் சுவாமிகள், உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன், வக்கீல் சேயோன், முன்னாள் எம்.எல்.ஏ. ஜெகவீர பாண்டியன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை கண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை வைத்தீஸ்வரன் கோவில் கட்டளை திருநாவுக்கரசு சுவாமிகள் தலைமையில் கோவில் சிப்பந்திகள் செய்துள்ளனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu