தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான குத்தாலம் அரும்பன்னவன கோயில் கும்பாபிஷேகம்
குத்தாலம் அருகே தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும், சமயக்குரவர்கள் மூவரால் பாடல்பெற்றதுமான அரும்பன்னவன முலையம்மை சமேத ஸ்ரீ உக்தவேதீஸ்வரர் சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் 1960ஆம் ஆண்டு நடைபெற்றது. அதன் பின்னர் தற்போது அன்பர்கள் உதவியுடன் ஆலயத்தின் திருப்பணிகள் செய்து புதுப்பித்து கும்பாபிஷேகப் பணிகள் நடைபெற்று வந்தன. திருப்பணிகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு கடந்த 4ஆம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்கின. 8 கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து மஹா பூர்ணாகுதியுடன் தீபாராதனை செய்யப்பட்டது. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தக் கடங்கள் தருமபுர ஆதீனம் 27ஆவது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
கருவறை கோபுரங்கள், ராஜகோபுரம், அம்பாள் முருகன் விநாயகர் உள்ளிட்ட சுவாமிகளின் கோபுரங்கள், பரிவார தெய்வங்களின் சன்னதி கோபுரங்கள் ஆகியவற்றின் கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி அம்பாள் உள்ளிட்ட தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீன 27வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீன 24வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ, அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், செங்கோல் ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ சிவபிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாரியா சுவாமிகள், தொண்டைமண்டல ஆதீனம் மற்றும் 20,000க்கும் மேற்பட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.500 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu