மனைவியை கொலை செய்த கணவன் கைது

மனைவியை கொலை செய்த கணவன் கைது
X
மயிலாடுதுறை அருகே குடும்பத் தகராறில் மனைவியை வெட்டிப் படுகொலை செய்த கணவனை கைது செய்து பெரம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.-

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் சரகம் அன்னவாசல் ஊராட்சி வாடகுடியை சேர்ந்தவர் வீரமணி(55) கூலித்தொழிலாளி. இவரது மனைவி மோகனாம்பாள்(45). இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர்.

கடந்த சில மாதங்களாக தம்பதியினரிடையே குடும்பத் தகராறு இருந்துள்ளது. பயிர் காப்பீட்டு தொகையை மனைவி மோகனாம்பாள் கேட்டதில் தகராறு ஏற்பட்டதால் வீரமணி மனைவியை பிரிந்து திருக்கடையூரில் உள்ள அவரது சகோதரர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

பிள்ளைகளுடன் வாடகுடியில் வசிக்கும் மோகனாம்பாள் கூலிவேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். இந்நிலையில் வாடகுடி பாலம் அருகே வேலைக்கு சென்றுவிட்டு நடந்து வந்துகொண்டிருந்த மோகனாம்பாளை வழிமறித்து அரிவாளால் சராமாரியாக வெட்டிவிட்டு வீரமணி அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

இதில் படுகாயமடைந்த மோகனாம்பாள் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த மோகனாம்பாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தொடர்ந்து வீரமணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கணவன் மனைவியை வெட்டிக் கொன்ற இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!