வீடு தேடி வரும் நலத்திட்ட உதவிகள்- அமைச்சர் மெய்யநாதன் தகவல்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் உள்ள அனைத்துத்துறை வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சுற்றுச்சூழல், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பங்கேற்று, கொரோனா தொற்றால் ஒற்றை பெற்றோரை இழந்த 15 குழந்தைகள் மற்றும் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் வாகனம் உள்ளிட்ட ரூ.49 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து காவல்துறை, வருவாய்த்துறை, ஊரகவளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை, பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை, சுகாதாரத்துறை, நெடுஞ்சாலைகள்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்து கலந்தாலோசித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மெய்யநாதன் கூறுகையில், மயிலாடுதுறை மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளிலும் மக்களின் பிரச்னைகளை அறிந்து, பயனாளிகளை தேர்வு செய்து அதற்கான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளின் இல்லத்துக்கே கொண்டு சேர்க்கும் பணியை தொடங்க உள்ளோம். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பயிர்க்காப்பீட்டுத் தொகை பல்வேறு பகுதிகளில் சரிவர வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளனர். அதன் விபரத்தை மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுள்ளோம். அது வந்தவுடன் தமிழக முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மாவட்டத்தில் மழை வெள்ள காலங்களில் நீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து அங்கு வடிகால் வசதி மேம்படுத்தப்படும் என்றார். இக்கூட்டத்தில் ராமலிங்கம் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், ராஜகுமார், பன்னீர்செல்வம் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu