சீர்காழி அருகே கனமழையால் பாதிப்பு: 12 கிராம மக்கள் கடும் அவதி

சீர்காழி அருகே கனமழையால்  பாதிப்பு: 12 கிராம மக்கள் கடும் அவதி
X

சீர்காழி அருகே மழை நீரால் சூழப்பட்ட ஒரு கிராமம்.

சீர்காழி அருகே கனமழையால் பாதிப்பு ஏற்பட்டு நீர் சூழ்ந்ததால் 12 கிராம மக்கள் கடும் அவதி அடைந்து உள்ளனர்.

வடகிழக்கு பருவமழை தொடங்கி ஒருமாத காலமாக தொடர் மழை பெய்து வரும் நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நல்லூர் கிராமத்தில் நான்கு சாலை சந்திப்பு வீதிகள் மழைநீரில் மூழ்கியுள்ளது.கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மழைநீர் தேங்கியுள்ளதால் நல்லூர் மட்டுமின்றி ஆரப்பள்ளம்,காட்டூர்,கோதண்டபுரம் அளக்குடி,முதலைமேடு உள்ளிட்ட 10 கிராம மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

குறிப்பாக கொள்ளிடம் ஆற்றின் காரையோரம் அமைந்துள்ள கிராம மக்கள் நல்லூரை கடந்துதான் கல்வி,மருத்துவம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு செல்ல வேண்டும்.இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாகவே மழைக்காலங்களில் இந்த மழைநீரை கடந்துதான் சென்று வருகின்றனர்.பலமுறை ஊராட்சி ஒன்றியம் துவங்கி மாவட்ட ஆட்சியர் வரை கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் இந்த நான்கு வீதிகளை சேர்ந்த மக்கள் வீடுகளை விட்டே வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இப்படி ஆண்டு தோறும் பொதுமக்கள் பாதிக்கப்படுவதால் நல்லூர் நான்கு சாலை சந்திப்பை சீரமைத்து மழைநீர் தேக்காமல் தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story