தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் குருலிங்க சங்கம பாத யாத்திரை
தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் குருலிங்க சங்கம பாத யாத்திரை மேற்கொண்டபோது எடுத்த படம்.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான உக்தவேதீஸ்வரர் சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா, மே 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இவ்விழாவில் பங்கேற்க தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் ஆதீனத் திருமடத்தில் இருந்து பூஜாமூர்த்தியான சொக்கநாத பெருமானுடன் குருலிங்க சங்கம பாத யாத்திரையாக புறப்பட்டார்.
வழியெங்கும் குருமகா சந்நிதானத்துக்கு ஆதீனக் கல்வி நிலையங்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் பக்தர்கள் பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்து, தீபாராதனை எடுத்து வழிபாடு மேற்கொண்டனர். மயிலாடுதுறை மாயூரநாதர் சுவாமி கோயிலில் தருமபுரம் ஆதீனம் வழிபாடு மேற்கொண்டார். முன்னதாக தரங்கம்பாடி சாலையில்; இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்வதர்கள் என மும்மதத்தினர் தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்துக்கு மத நல்லிணக்க வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து, சித்தர்க்காடு சிற்றம்பல நாடிகள் சுவாமி கோயிலில், இரவு சொக்கநாத பெருமானை எழுந்தருளச் செய்து தருமபுரம் ஆதீனம் வழிபாடு நடத்தினார். தொடர்ந்து, சித்தர்க்காட்டில் இருந்து புறப்பட்டு குத்தாலம் உக்தவேதீஸ்வரர் கோயிலில் சொக்கநாதபெருமானை எழுந்தருள செய்து, உக்தவேதீஸ்வரர் கோயில் யாகசாலை பூஜை மற்றும் குடமுழுக்கு விழாவில் குருமகா சந்நிதானம் கலந்து கொண்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu