மயிலாடுதுறை அருகே குளத்தில் உள்ள முதலையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம்
மயிலாடுதுறை அருகே குளத்தில் முதலையை தேடும் வனத்துறையினர்.
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே சாத்தங்குடி கிராமத்தில் மாரியம்மன் கோயில் குளத்தில் மீன்கள் வளர்க்கப்பட்டு பொதுமக்களுக்கு ஏலம் விடப்படுவது வழக்கம். இந்த நிலையில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து பிரியும் ராஜன் வாய்க்கால் வழியாக முதலைகள் இந்த குளத்தில் வந்து அதிக அளவில் மீன்களை உண்பதாக பொதுமக்கள் வனத்துறைக்கு புகார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து வனத் துறையினர் கடந்த 6 நாட்களாக குளத்தில் முதலையை தூண்டில் அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று இதே பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் குளத்தில் இறங்கிய போது அவரை காணவில்லை. இரவு முதல் தேடியும் அவரது உடலை கண்டுபிடிக்க முடியாததால், ராமலிங்கம் என்பவரை முதலை இழுத்துச் சென்றிருக்கலாம் என இப்பகுதி மக்கள் அச்சத்தில் இருந்தனர்.
இதையடுத்து வனத்துறையினர் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஆடு மற்றும் கோழி இறைச்சிகளை கொண்டு முதலை தூண்டில் முள் அமைத்து மிதவை படகு மூலம் தேடினர். பொது மக்களும் அலக்கு போன்ற நீண்ட குச்சிகளின் உதவியோடு உடலை தேடினர். நீண்ட முயற்சி பிறகு பொது மக்கள் ராமலிங்கத்தின் உடலை கைப்பற்றினர். அவரது உடலில் எந்தவித காயம் ஏற்படவில்லை. இதனால் அவரை முதலை தாக்கவில்லை என வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் வேறு ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் முதலையை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu