சீர்காழி அருகே பக்கிங்காம் கால்வாயை சீரமைக்க மீனவர்கள் கோரிக்கை
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நீர்வழி வணிக போக்குவரத்துக்காக உருவாக்கபட்டது பக்கிங்காம் கால்வாய். மீனவர்கள் கடலுக்கு சென்றுவர பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பழையாறு முதல் திருமுல்லைவாசல் வரை எஞ்சியுள்ள பக்கிங்காம் கால்வாய் கடலோர பகுதியை சேர்ந்த 10 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரத்தில் ஓர் அங்கமாய் விளங்கியது.
இந்நிலையில் பக்கிங்காம் கால்வாய் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி காடுகள் மண்டி, குட்டைபோல் ஆனதாலும் மண்திட்டுகள் ஏற்பட்டு கரைகள் சிதைந்து தூர்ந்து போனதாலும் இதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதனால் விலையுயர்ந்த படகுகள் மற்றும் வலைகளை பாதுகாப்பின்றி கடற்கரையோரம் வைத்து செல்கின்றனர்.மேலும் இயற்கை பேரிடர் மற்றும் அவசர காலங்களில் தங்கள் படகுகளையும்,வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களையும் அப்புறபடுத்துவது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவதாக மீனவர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
பக்கிங்காம் கால்வாய் பராமரிக்கபட்டிருந்தால் தங்கள் படகுகள்,வலைகளை குடியிருப்புகள் அருகே பாதுகாப்பாக வைக்கமுடியும் எனவும் இயற்கை பேரிடர் போன்ற பாதிப்புகளில் இருந்து தங்களையும், தங்கள் உடைமைகளையும் பாதுகாக்க முடியும் எனவும் தெரிவித்தனர். எனவே மீனவர்களின் வாழ்வாதார அங்கமாக விளங்கும் பக்கிங்காம் கால்வாயின் கரையை பலப்படுத்தி செடி,கொடிகளை அகற்றி தூர் வாரி சீரமைத்துதர வேண்டும் என மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu